அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! புரட்சிகர வணக்கம் 01.02.2022
இலங்கைத் தீவு அந்நியரின் ஆட்சிப்பிடியில் இருந்து விடுதலைக்காக அதிகம் போராடிய தமிழ்மக்கள், சுதந்திர இலங்கையில் புறக்கணிக்கப்படத் தொடங்கியவேளை, அதற்கெதிராக இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக புறக்கணித்து முதன் முதலில் 1956 இல் தமிழரசுக் கட்சியினர் அறிவித்தனர். திருகோணமலையில் நடராசன் என்ற தமிழ்விடுதலை உணர்வாளர், அப்பகுதியில் உள்ள அரச கச்சேரியில் பறந்த இலங்கைத் தேசியக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியை பறக்கவிட்ட போது சிங்கள காவல்துறையால் 04.பெப்ரவரி 1956 இல் சுட்டுக்கொல்லப்பட்டு இன்றுடன் 66 ஆவது நினைவு ஆண்டாகியுள்ளது. சிங்கள சுதந்திரத்தின் 74 ஆவது ஆண்டுகளாகிய நிலையில் சிங்கள பௌத்த பேரினவாதம் எவ்வாறு இருந்ததோ, அதே நிலைப்பாட்டிலேயே தான் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.
சிங்கள தேசம் தமிழர்களை பூண்டோடு இல்லாதொழிக்கலாம் என்ற திட்டமிடலில் சென்றபோதும், ஆயுத அடக்குமுறையை மேற்கொண்டமையால் அதற்கு எதிராக தமிழ் இளம் பரம்பரை தம் உன்னதமான உயிர்க்கொடையைத் தந்து ஆயுதப்போராட்டத்தைக் கையில் எடுத்தமையால் எதிரியின் திட்டம் பலனளிக்காத போதும், தமிழர் தியாகத்தால் தமிழீழ தேசம் தலைநிமிர்ந்து நிற்கத் தலைப்பட்டுள்ளதை பொறுக்க முடியாது சர்வதேசத்தின் காலடியில் சிங்கள தேசம் தனது முழுத்தீவையும் அடகுவைத்துள்ளது. வல்லரசு ஆக்கிரமிப்பிற்குள் தமிழர் வீரியம் அமைதியடைந்தபோதும், அதிலிருந்து மீளவும் மீண்டெழுந்து அரசியல் சனநாயக ரீதியில் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசத்திலும் தம் தாயக மீட்பிற்கான போராட்டத்தினை பல முனைகளிலும் முன்னெடுத்துக் கொண்டேயிருக்கின்றனர். ஒரேநாடு, ஒரேமொழி, ஒரேதீர்வு என்றும், சமாதானம், நல்லிணக்கம், மாகாண அதிகாரம், நல்லாட்சி , ஒற்றயாட்சிக்குள் தீர்வு என்று கவர்ச்சிமிக்க பெயர்களுடன் எதுவுமேயற்ற தீர்வுகளாகவும், கிடப்பில் போடப்பட்ட எந்தவிதமான அடிப்படை உரிமையைக்கூட பெற்றுக் கொடுக்காத ஒப்பந்தங்களை தூசுதட்டி திருப்பி எடுப்பதும் அதற்கு துணையாக பழுத்த அரசியல்வாதிகளையும் இனி அவர்களால் தமிழினத்திற்கு எந்தவிதமான பலனுமற்றவர்களை இவ்வாறு பகடைக்காய்களாகப் பாவித்து பயனடையவும், காலத்தையும், நேரத்தையும், தமிழர்களின் அரசியல் போராட்டங்கள் சர்வதேசம் வரையான வீரியத்தைத் திசைதிருப்பவும் பல முயற்சிகள் எடுத்தபோதும் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் கோவிட் 19 பேரிடருக்கு மத்தியிலும் கடந்த ஆண்டு மக்கள் முன்னெடுத்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியும், கடந்த வாரம் நடைபெற்ற 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதியை முறியடிக்கும் “கிட்டு பூங்கா’’ பிரகடனமும் பேரணியும், சிங்கள தேசத்திற்கும், பாரததேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் ஒரு செய்தியையும், விழிப்புருவமுயர்த்திப் பார்க்கும் செயற்பாடாகவுமே பார்க்கப்படுகின்றன. தமிழர் தாயகப்பகுதிகளில் தொடரும் இராணுவ புலனாய்வு கண்காணிப்பிற்குள்ளும், கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மக்கள் அலையெனத் திரண்டிருக்கும் செய்தியானது சர்வதேசமெங்கும் வாழும் தமிழீழ மக்களுக்கு மீள் புத்துணர்ச்சியைத் தந்துள்ளது. “ பலம் என்பது மக்களிற்காக முடிவெடுப்போர் எண்ணிக்கையில் இல்லை! மக்கள் ஆணையை ஏற்றுச் செயற்படுவோர் எண்ணங்களில்தான் அது உள்ளது’’ என்பதற்கமைய இதனைத் துணிவுடன், உறுதியுடன் முன்னெடுத்து தமிழ்மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில், தொடர் அஞ்சல் ஓட்டத்தில், அரசியல் பாதையில் கையெடுத்திருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், தமிழ்த்தேசிய பேரவையின் கரங்களைப் பலப்படுத்துவது அனைத்து தமிழர்களின் தார்மீகக் கடமையுமாகும்.
“இலங்கை தேசத்தின் சுதந்திரநாள். ஈழத்தமிழ் மக்களின் கரிநாள்” என்று உயிர்ஈந்த நடராசன் அவர்களின் 66 ஆவது ஆண்டின் நினைவையும் நெஞ்சில் சுமந்து பிரான்சில் எதிர்வரும் 04.02.2022 வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.00 மணிமுதல் 17.00 மணிவரை சிறீலங்கா தூதரகத்திற்கு முன்பாக நடைபெறும் ஒன்றுகூடலில் அனைத்து தமிழ்மக்களையும் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
“ ஒற்றுமை என்பது ஒருசெயலில் ஒன்றாக ஓரணியில் நின்று ஓர்மமாய் உணர்வை வெளிபடுத்தலேயாகும்.
அரசியல் பிரிவு – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு.