இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக்கோரி பருத்தித்துறை மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்தை நேற்றுக் காலை முதல் மீனவர்கள் முற்றுகையிட்டதாலும், வீதி மறியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாலும் அந்தப் பிரதேசத்தில் பதற்ற நிலைமை காணப்பட்டது.
கடந்த 27ஆம் திகதி பருத்தித்துறை வத்திராயனில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற இருவர் நேற்றுமுன்தினம் சடலங்களாகக் கரையொதுங்கியுள்ளனர். அவர்களின் உயிரிழப்புக்கு இந்திய இழுவைப் படகுகளே காரணம் என்று உள்ளூர் மீனவர்கள் நம்பும் நிலையில், நேற்றுமுன்தினம் முதல் பருத்தித்துறை மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்கள் நேற்றுமுன்தினம் காலை முதல் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய இழுவைப் படகுகளால் அறுக்கப்பட்ட தங்கள் வலைகளை வீதியின் குறுக்கே வைத்து அவர்கள் மேற்கொண்ட போராட்டத்தால் வீதிப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தன. தங்கள் கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்திருந்தனர்.