சிறிலங்கா இராணுவ எதிர் நிலைப்பாட்டில் பிரிட்டன் பின்னடிப்பு: எதிர்க்கட்சி எம்பிக்கள் அதிருப்தி!

0
100

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பதற்கு பிரிட்டன் அரசாங்கம் காண்பிக்கும் தாமதம் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள அந்நாட்டின் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவ்வதிகாரிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பதற்கு வேறு என்ன ஆதாரங்கள் தேவைப்படுகின்றன ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளடங்கலாக இலங்கையின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பது குறித்து தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சியோபெய்ன் மெக்டொனாக் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரிட்டனின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அமன்டா மில்லிங், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை தொடர்பில் அவ்வதிகாரிகளுக்கு எதிராகக் காணப்படும் ஆதாரங்கள் குறித்து பிரிட்டன் அவதானம் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி பொதுவாக எதிர்காலத்தில் யாருக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படவேண்டும் என்பது குறித்து நாம் முன்கூட்டியே ஊகிப்பதில்லை. 

ஏனெனில் அவ்வாறு செய்வது அத்தகைய தடைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைக்கக்கூடும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் அமைச்சர் அமன்டா மில்லிங்கின் இந்த பதில் பிரிட்டன் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 

போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கையின் அரச அதிகாரிகள் அல்லது இராணுவ அதிகாரிகளில் குறைந்தபட்சம் ஒருவருக்கு எதிராகவேனும் தடைவிதிப்பதற்கு பிரிட்டன் அரசாங்கம் தவறியுள்ளமை தொடர்பில் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், இது தார்மீகப் பொறுப்புடைய பிரிட்டன் அடைந்துள்ள தோல்வி என்றும் விமர்சித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட தற்போதைய இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகவும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் பிரிட்டன் சர்வதேச மெக்னிஸ்ற்கி சட்டத்தின்கீழ் தடைவிதிக்கவேண்டும் என்று அண்மையகாலங்களில் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே தொழிற்கட்சி உறுப்பினர் சியோபெய்ன் மெக்டொனாக்கினால் பிரிட்டன் பாராளுமன்றத்தில் மேற்குறிப்பிட்டவாறான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

அத்தோடு இலங்கையின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பதற்கு பிரிட்டனின் வெளிவிவகாரச் செயலாளருக்கு வேறு என்ன ஆதாரங்கள் தேவைப்படுகின்றன? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here