அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!
எமது புரட்சிகர வணக்கம். 26.01.2022
21 ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் தமிழின அழிப்புக்கு உள்ளானதொரு மக்களாகவும், இன்றுவரை சர்வதேச வல்லரசுப் போட்டிகளின் பகடைக்கற்களாகவும் நின்று கொண்டிருக்கும் தமிழீழ மக்களாகிய நாம், எம்தேசமும் எமக்காக உயிர் தந்த உன்னதர்களும் மக்களும் கொடுத்த உயிர் விலைகளின் பாதை எதற்காகவோ அதில் சென்று எமது இலக்கை அடைந்திடும் வரையில் எம்தேச மக்களும் அவர்களுடன் புலம்பெயர் மக்களும் தமது அறப்போரினை செய்துகொண்டே தான் இருக்கப்போகின்றனர்.
இரத்தமும் சதையும் உயிரிழப்பும், துன்பம், துயரம், கண்ணீர், வேதனைகள் போன்றவை தமிழீழ மக்கள் எமக்கு ஒன்றும் புதிதல்ல. இவற்றை கடந்த 74 ஆண்டுகளாக நாம் அனுபவித்துக் கொண்டேதான் இருக்கின்றோம். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளியாது பாரததேசத்தின் பிராந்திய நலன்கருதி அன்றைய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டதும் ஒற்றையாட்சிக்குள் தமிழர்களின் உணர்வுகளையும் அதன் வெளிப்பாடான உயிர்த்தியாகப் போராட்டத்தையும் அர்ப்பணிப்பையும் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற ஒன்றைக் கொண்டு வந்ததும் அதனை சிங்கள அரசுகூட ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைக்காட்ட அன்றைய பாரதப் பிரதமர் மீது மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதல் கட்டியம் கூறி நிற்கின்றது என்பதை யாரும் மறக்க முடியாது.
இவற்றையெல்லாம் தமது கண்முன்னே கண்டவர்கள், அன்று அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் இன்று சோரம் போகும் வகையிலும், தாம் பாராளுமன்றம் செல்லவும், மாலை மங்களத்துடன் சந்தோசப்பவனி வரவும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழர் தேசியம், சுயநிர்ணயம், சமஸ்டி பேசி எமது மக்களின் வாக்கு அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டு, இன்று அம் மக்களின் அபிலாசைகளை வெளிப்படையாகவே புறந்தள்ளி நிற்கும், இரா.சம்பந்தன் (Mp TNA ) , மாவை சேனாதிராஜா (ITAK ,TNA) சி.வி.விக்னேஸ்வரன் (MP-TMK TMTK ) செல்வம் அடைக்கலநாதன் (MP-TELO,TNA ) தர்மலிங்கம் சித்தார்த்தன் ( MP-DPLF ,TNA ) சுரேஸ் பிரேமச்சந்திரன் (EPRLF-TMTK) ந.சிறீகாந்தா (TNP,TMTK ) ஆகிய 07 தமிழ்க்கட்சியினர் ஒற்றையாட்சிக்குள் எம்மை முடக்கும் இந்த 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்று கையெழுத்திட்டிருப்பதும் கையளித்திருப்பதும் மிகப்பெரும் துரோக செயலாகவும், துரோக முகங்களாகவுமே பார்க்கப்படுகின்றது.
தாயகத்திலும், சர்வதேசமெங்கிலும் தமிழர்தம் தேசவிடுதலைப் போராட்டத்தை உலகவல்லரசுகள் தமது பலப் போட்டி நலனாகப் பார்த்தாலும் தம் தாயகம் தேடி அதிகரித்து வரும் அடுத்த தலைமுறையினரின் தேடல், அரசியல் பயணம் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நீதி நியாயப்பாட்டில் சர்வதேசம் வரும் போது, எமது மக்களின் ஆணையைப்பெற்ற வட்டுக்கோட்டை பிரகடனத்தை உரைத்து அதனை அரசியல் அங்கீகாரமாக முன்னிறுத்தாமல் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் தலையாட்டிகளாகத் தொடர்ந்து செல்ல முற்படும் இவர்களைத் தமிழ் மக்கள் நிராகரிப்போம். இவர்களின் கபடத்தனத்தை உலகிற்குக் காட்டுவோம்..
அன்பான தமிழீழ மக்களே!
தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கின்ற, தமிழ் மக்களின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளாத, தமிழ் மக்களுக்கென்றோரு தாயகக்கோட்பாடு உண்டு என்பதை புறந்தள்ளுகின்ற, ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ளாது எமது பூர்வீக மண்ணான வடக்குக்கிழக்கு அவர்களின் வாழ்விடம் என்பதைக்கூட கூறமுற்படாது, காணி நிலம், காவல், பாதுகாப்பு, நிதி, நீதி அதிகாரங்கள் எதுவும் வழங்காது, தமிழினத்தின் கோடரிக் காம்புகளை வைத்து அரசியல்செய்து வந்ததோடு மட்டுமல்லாது, தமிழினப் பிரச்சனைக்குத் தீர்வுகண்டுவிட்டதாக உலகிற்குக் காட்டி ஒரு காலத்தில் ஒரேமொழி, ஒரே நாடு என்று கொண்டு வந்தது போல, இன்று ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை அடக்கி ஆளநினைக்கும் சிந்தனைக்கும், கடந்த 35 ஆண்டுகளாக எதுவுமே அற்று நீர்த்துப்போன 13 ஆவது சட்டமூலத்தை தமிழர் தீர்வாகவும், அதன் ஆரம்பப்புள்ளியாகவும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை உறுதியோடு உரைக்கும் தாயக மக்களோடும், புலம்பெயர்ந்த மக்களோடும் பிரான்சுவாழ் தமிழீழ மக்கள் நாமும் உரத்துக்குரல் கொடுப்போம்.
எம்தாயக தேசத்தில் எதிர்வரும் 30 ஆம் நாள் நடைபெறும் தமிழீழ மக்களின் எதிர்கால இருப்புக்கான போராட்டத்தில் அனைத்து பிரதேசங்களிலும் வாழும் தமிழ்மக்கள் கலந்து கொண்டு சிங்கள தேசத்துக்கும் எமது கண்டனத்தையும் சர்வதேசத்திற்கு எமது அபிலாசைகளையும் எடுத்துச்சொல்வோம்.
‘ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’’
Home
சிறப்பு செய்திகள் 13 ஆவது சட்டமூலத்தைத் தீர்வாக தமிழ் மக்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது!