தலைவர்கள் உருவாகிறார்கள் அரசியல்வாதிகள் உருவாக்கப்படுகிறார்கள் : அமைச்சர் ஐங்கரநேசன்!

0
113

inkaranesanசிறுவயது முதலே பொதுப்பணிகளில் ஈடுபட்டு, இலட்சிய தாகத்தை வளர்த்துக்கொள்பவர்கள் பின்னாளில் அனைவராலும் போற்றப்படும் தலைவர்களாக உருவாகிறார்கள். இவர்கள் அரசியல் தலைவர்களாகவும் பரிணாமிப்பது உண்டு. இதற்கு அமரர்,மாமனிதர் சிவமகாராசா ஓர் உதாரணம். ஆனால், இன்று அரசியல்வாதிகள் பெரும்பாலும் உருவாக்கப்படுகிறார்கள் என்று வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

அமரர்சி.சிவமகாராசா கூட்டுறவுத்துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியதோடு, இரண்டு தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். ‘நமது ஈழநாடு’ பத்திரிகையின் நிர்வாக இயக்குநராகவும் இருந்த இவர் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். விடுதலைப்புலிகளால் ‘மாமனிதர்’ பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட அன்னாரது நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று தெல்லிப்பளை பல நோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,   அமரர் சிவமகாராசா நல்ல தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒருவர். தனது 22ஆவது வயதில் மாவிட்டபுரம் கிராம முன்னேற்றச் சங்கத்தின் செயலாளராகப்பொதுவாழ்வில் பிரவேசித்த சிவமகாராசா 68 ஆவது வயதில் சுட்டுக்கொல்லப்படும் வரை தனது வாழ்நாளைத் தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக அர்ப்பணித்த ஒரு சிறந்த சமூக சேவையாளர்.

மாவிட்டபுரம் விளைபொருள் உற்பத்தி விற்பனைச் சங்கத் தலைவர்,தெல்லிப்பளை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர், வலி வடக்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத் தலைவர், வலி வடக்கு பிரசைகள் குழு ஒன்றியச் செயலாளர்,வலி வடக்கு புனர்வாழ்வுக் கழகச் செயலாளர் என்று இளவயது முதலே தன்னலமற்ற பொதுவாழ்வில் ஈடுபட்டபடியால்தான்  தமிழ்ச் சமூகம் மதிக்கும் தலைவர்களுள் ஒருவராக அவரால் உயர முடிந்தது. அவ்வாறு அவரை மக்கள் அடையாளம் கண்டதால்தான் அவரை அரசியலிலும் வெற்றிபெற வைத்து இரண்டு தடவைகள் நாடாளுமன்றத்துக்கும் அனுப்பி வைத்தார்கள்.    ஆனால், இன்றைய சூழ்நிலையில் ஒருவர் திடீரென அரசியலில் நுழைந்து வெற்றிபெற முடிகிறது.

சமூகத்துக்கு கடந்த காலங்களில் அவர் ஆற்றிய பணி என்ன என்பதைவிட தேர்தலுக்குச் செலவழிக்க இப்போது அவரிடம்உள்ள பணம் எவ்வளவு என்பதே வெற்றியைத் தீர்மானிக்கிறது. நடைபெற்று முடிந்த பாரளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் மில்லியன் கணக்கான ரூபாய்களைத் தங்களை விளம்பரப்படுத்துவதற்காகச் செலவிடவேண்டியிருந்தது. சிவமகாராசா போன்ற சமூகப் பணியாளர்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கான கதவுகள் அடைக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here