சாவகச்சேரி, சங்கத்தானையில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று (24) திங்கட்கிழமை பிற்பகல் 6.30 மணியளவில் அரசடி தொடருந்துக் கடவைக்கும் சங்கத்தானை தொடருந்துக் கடவைக்கும் இடைப்பட்ட பாதுகாப்பற்ற தண்டவாளப் பகுதியை கடக்க முற்பட்ட இளைஞனை கொழும்பிலிருந்து வந்த கடுகதிப் புகையிரதம் மோதியதில் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம், இயற்றாலைப் பகுதியைச் சேர்ந்த 18 வயதான உதயகுமார் பானுசன் என்ற மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தண்டவாளப் பகுதிக்கு அப்பால் உள்ள தையல் கடைக்கு சென்று விட்டு தண்டவாளத்தைக் கடந்த மாணவன் மீண்டும் கடையில் தவறவிடப்பட்ட தனது ஆடை ஒன்றினை எடுப்பதற்காக தண்டவாளத்தைக் கடந்த போது தொடருந்து மோதித் தள்ளியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையில் இன்று இடம்பெற இருந்த ஒன்று கூடலில் கலந்து கொள்ள இருந்த இரட்டையர்களில் ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.