வவுனியா, வைரவப்புளியங்குளத்தில் தொடருந்து நிலைய வீதியில் அமைந்துள்ள மதுபான சாலை விருந்தகத்தில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சுமார் 4 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோதும், விருந்தகத்தின் பெரும் பகுதி எரிந்து அழிந்துள்ளது.
நேற்று அதிகாலை 3 மணியளவில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டு எழுந்த அயலவர்கள், மதுபானசாலை விருந்தகத்தில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதை அவதானித்தனர். அவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய வவுனியா நகரசபை தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
பெரும் போராட்டத்தின் பின்னர் நேற்றுக் காலை 7 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆயினும் மதுபானசாலை விருந்தகத்தின் பெரும்பகுதி தீயால் அழிந்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.