பேரினவாதிகளின் அன்றைய அசமந்த போக்காலும், பாரததேசத்தின் ஆளுமையற்ற அரசியல் தலைமையினாலும் அமைதியும் சமாதானமும் சுமந்து சர்வதேசத்தின் நம்பிக்கையான செய்தியுடன் தன்தோழர்களுடன் தமிழீழத் தாயகம் நோக்கிச் சென்ற எம் தானைத் தலைவன் தம்பியாய் வரித்துக்கொண்ட கேணல் கிட்டு அவரின் சகதோழன் குட்டிசிறி உட்பட 10 மாவீரர்களை வங்கக்கடலில் சங்கமமாக்கிய 29 ஆண்டுகள் இன்று ஆகிவிட்ட நிலையில் உலகெங்கும் வாழும் தேசப்பற்றறுமிக்க உணர்வுள்ள தமிழர்களால் அவர்கள் நினைவு கூரப்பட்டுள்ளனர்.
பிரான்சில் தற்போது இருக்கும் பேரிடர் வைரசு தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்குரிய சுகாதார வழிமுறைகளைப்பேணி இன்று 16.01.2022 ஞாயிற்றுக்கிழமை பி. பகல் 16.00 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணிமனையில் நினைவேந்தல் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் திறான்சி பிராங்கோ தமிழ்ச்சங்க உறுப்பினர் திரு. முகுந்தன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவீரர் பொதுப்படத்திற்கும், கேணல் கிட்டு அவர்களின் திருவுருவப்படத்திற்கும் ஜெயசிக்குறு நடவடிக்கையின்போது ஒலுமடு பகுதியில் 1998 அன்று வீரமரணத்தை தழுவிக்கொண்ட மேஜர். விடுதலையின் சகோதரி அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து கடற்கரும்புலி மேஜர் ஈழவீரனின் சகோதரர், கப்டன் துரியோதனனின சகோதரர், லெப்.கேணல் கலையொழியின் சகோதரர், 2 ஆம் லெப். ஆதவனின் சகோதரர்கள் மாவீரர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கத்தையும் செலுத்தியிருந்தனர். தொடர்ந்து செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் சுடர்ஏற்றி, மலர் வணக்கம் செலுத்தினர்.
நிகழ்வில் மாவீரர் நினைவுரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.
அவர் தனது உரையில்,
அன்று சரி இன்றும் சரி தமிழ்மக்கள் பெரியதாக நம்பியிருந்த பாரததேசம் ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகளை அன்றும் புரிந்து கொள்ளவில்லை இன்றும் அதே நிலைதான். என்றும் எமது விடுதலை போராட்டத்தின் போராட்ட வீரர்களில் பல்துறைவித்தகனாக தமிழீழ மக்களுக்கும் சிங்களத்திற்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மாவீரன் கேணல் கிட்டு அவர்கள் என்றும், தேசியத்தலைவரின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைய பல பொருளாதார அபிவிருத்திகளையும், பல்வேறு விடயங்களை தமிழீழ மண்ணில் உருவாக்கியதையும், புலம்பெயர் மண்ணில் சர்வதேசத்தின் விருப்பத்திற்கு அமைவாக’ குவேக்கர்ஸ்’ இன் சமாதான சமிக்ஞை செய்தியுடன் எம்.வி. அகாத் என்னும் கப்பலில் சுமந்து சர்வதேச கடற்பரப்பில் சென்றபோது அதனை வழிமறித்து அவர்கள் மீது தமது ஆதிக்க வெறியை காட்ட முற்பட்டவேளையிலும், உண்மைக்கு மாறாக கைதுசெய்யும் அநாகரிகத்தில் நாம் நம்பிய பாரததேசம் ஈடுபட்டமையால் தமது அமைப்பு மரபுக்கு அமைவாக தம்மைத்தாமே அழித்து வங்கக்கடலில் சங்கமித்தனர்.
இதுவோர் ஈழத்தமிழ் மக்களுக்கு பாரததேசமும் அன்றைய ஆட்சியாளர்களும் செய்த மிகப்பெரிய நம்பிக்கைத்துரோகமாகும் என்றும் இன்று அது பாராமுகமாக இருந்து வரும் நிலைப்பாடும் தமிழ்ப்பேசும் மக்களுக்கு பெரும் துன்பத்தையும், நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்துகின்ற நிலையில் தற்பொழுது புதிதாக மூன்று தசாப்தங்களுக்கு முன்பாகவே இரண்டு நாடுகள் தமிழர்களின் உணர்வுகளுக்கும், வேணவாவையும், கொடுத்த விலைகளையும் கவனத்தில் கொள்ளாது தமக்கு ஏற்றவகையில் தமிழர்களை ஆசைகாட்டி ஏமாற்றி 13 ஆவது திருத்தச்சட்டத்தை கையில் எடுத்திருப்பதும் தமிழ் மக்களுக்கு எதுவுமே தராத இந்த ஏமாற்றுத்திட்டத்தை விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடியவர்களும், தமிழ் மக்கள் நம்பி தமது வாக்குகளை வழங்கி பாராளுமன்றம் அனுப்பிய தமிழ்அரசியல் வாதிகளே இதற்கு துணைபோவதும் தமிழ் மக்களும் அதன் உயிர்விலைக்கும் தம்மைநம்பி தம்உயிரை கொடுத்த தமது மாவீரர்களுக்கும் செய்யும் பெரும் கேவலமாகவே பார்க்கவேண்டும். எந்த விதமான பயனுமற்ற விடயத்தைக் கையில் எடுத்திருப்பதும் இன்று அதை பேசுபொருளாக எடுத்திருப்பதும் நாட்களையும் மக்களையும் அவர்கள் மனதையும் நோகடித்து விரக்தி நிலைக்கு இட்டுச்செல்லும் ஒரு செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.
ஆனால், அவர்களின் நோக்கம் இன்று புலத்தில் வாழும் தமிழீழ மக்கள் தெட்டத்தெளிவாக புரிந்துகொண்டுள்ளனர். அதற்கு எதிராக பல்வேறு சனநாயக வழிப்போராட்டங்கள் நடைபெறுவதும் அதனைத் தொடர்ந்து ஈழமண்ணிலும் அந்தப்போராட்டம் தொடரும் என்றும் தொடர்ந்து எமது தேசவிடுதலைக்கான சனநாயக அரசியல் ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் அதில் எமது மக்கள் பங்கு கொண்டு தமது பலத்தைக்காட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு ரத்தமும், சதையும், துன்பமும், துயரும் கண்ணீரும் ஒன்றும் தமிழீழ மக்களைப் பொறுத்தவரை புதிதல்ல.பல்வேறு துயரத்தில் இருந்து மீண்டவர்கள், வாழ்ந்தவர்கள் தமிழீழ மக்களாகிய நாங்கள் என்றும் இந்த பேரிடர் எமக்கு ஒரு சவாலாக இருந்தாலும் ஒவ்வொரு நாட்டினதும் சட்டதிட்டங்களையும், அறிவுரைகளையும், மதிப்பளித்து எமது தாயக விடுதலையை நோக்கி சோர்ந்து போகாது நம்பிக்கையோடு, உறுதியோடு பயணிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அவரது உரையைத் தொடர்ந்து பிரான்சு தமிழர் மனிதவுரிமைகள் மையத்தின் பொதுச்செயலாளர் திரு. ச.வே. கிருபாகரன் அவர்களும் தற்கால அரசியல்கள் பற்றியும் கடந்த காலத்தில் நாம் எவ்வாறு ஏமாற்றப்பட்டோம். ஏமாற்றியவர்கள் பற்றியும் ஆனால், நேர்த்தியான பணியில் நாம் எப்போதும் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றார்.
கேணல் கிட்டு போன்று மண்மீட்புக்காக பெரும் நம்பிக்கையோடு எனக்குப்பின் வருகின்றவன் இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் சாவைத் தழுவிய ஆயிரமாயிரம் மாவீரர்களதும், மக்களதும் வேணவா நிறைவேறும் வரை நாம் கொண்ட அந்த இலட்சியத்தை மட்டுமே மனதில் கொண்டு உண்மையாகவும், கொள்கையில் உறுதியாகவும் பயணிக்க வேண்டும் அதுவே இங்கு நினைவேந்தல் செய்யும் மகத்தானவர்களுக்கு செய்யும் உண்மையான வணக்கமாகும் எனக் கூறி “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடலுடன் தாரக மந்திரமாம் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற உறுதியுரையுடன் நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.