”தைபிறந்தால் வழி பிறக்கும்’’ என்பது காலாகாலமான நம்பிக்கை!

0
286

பாரிஸ் – தை 14 2022

தமிழர் திருநாள்-

தைப்பிறந்தால் வழி பிறக்கும்” என்பது முன்னோர் வாக்காகும். தைத்திருநாளை தமிழர் திருநாள் என்று சொல்லும் அளவுக்குத் தமிழர்களுக்கும் தை முதல் நாளான பொங்கல் பண்டிகைக்கும் அவ்வளவு நெருங்கிய தொடர்புகள் உள்ளன.

தைப்பொங்கலை தமிழர் திருநாள் என்பார்கள். விவசாயிகள் அனைவரின் வாழ்விலும் புதுவாழ்வு பொங்கும் நாள். அதனால்தான் ‘தைப்பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது காலகாலமான நம்பிக்கையாக இருக்கிறது.

பொதுவாக ஒவ்வொரு மதத்தினருக்கும் தனியாக ஒரு பண்டிகை உண்டு. இந்துக்கள் தீபாவளி கொண்டாடுவார்கள். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள். முஸ்லிம்கள் ரம்ஜான் கொண்டாடுவார்கள். இப்படி ஒவ்வொரு மதத்தினரும் அவரவருக்கு உரித்தான பண்டிகையை அவரவர் மட்டும் கொண்டாடுவார்கள். அடுத்தவர்கள் வாழ்த்து சொல்வார்கள்.

ஆனால் தைப்பொங்கல் சமய எல்லைகளுக்கு அப்பால் பட்டது, தமிழர்களாக இணைந்து கொண்டாடுவதுதான் தானோ இந்தச் சிறப்பான நாளை “தமிழர் திருநாள்” என்கிறோம்.

தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகாவும் இந்த நாள் ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டது. இடையில் சித்திரைக்கு மாறிப் போனது. இப்போது மீண்டும் தை முதல் நாளைத் தமிழர் புத்தாண்டின் முதல் நாளாக நாங்கள் கொண்டாடி வருகிறோம். இந்த உலகம் உருவாகியபோது, உலகத்தில் வாழும் அனைவருக்கும் சூரியனும், இயட்கையும் தான் மனிதகுலத்தின் வாழ்வியலாக இருந்தது.

தமிழர் திருநாள்… தைப் பொங்கல், அறுவடைத் திருநாளெனக் கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். தமிழர்கள் இருக்குமிடமெல்லாம் பொங்கல் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது இந்தப் பண்டிகை ஒன்று ஒரு கூற்று உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது. சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்குப் புதியீடு என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள்.

இந்தப் பண்டிகைக்கான மிக முக்கிய காரணம் உழைக்கும் மக்களுக்கான பண்டிகையாகவும், இயற்கை தெய்வமான சூரியனை வழிபடுவதற்கும், மற்ற உயிரினங்களுக்கு நன்றி சொல்வதற்காகவும் நாம் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். ஆடி மாதத்தில் விதைத்த நல்ல விதைகள், வளர்ந்து அதன் முழு பலன்களை அடையக்கூடிய பருவம் அதாவது அறுவடை செய்யக்கூடிய பருவம் தான் தை மாதம் பயிர்கள் விளைய உதவியாக இருந்த இயற்கையை அதாவது கதிரவன், நிலம், பசுக்கள், கலப்பை, இவற்றிற்கு நன்றி சொல்வதற்காக நாம் கொண்டாடும் பண்டிகைதான் பொங்கல்.

இந்தப் பண்டிகை உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களான தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

பொங்கல் திருநாளின் முதல் நிகழ்வான போகி பண்டிகையன்று, அதிகாலையில், அனைவரும் எழுந்து குளித்து, வீட்டில் உள்ள தேவையற்ற, பழையை பொருட்களை வீட்டின் முன்பு வைத்துத் தீயிட்டு கொளுத்துவார்கள். அல்லவை அழிந்து நல்லவை வரட்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வீட்டுப் பொங்கல்.

2ஆவது நாளான பொங்கல், விசேஷமானது. தை மாதப் பிறப்பு நாள் இது. சர்க்கரைப் பொங்கல் என்று இந்தப் பண்டிகைக்குப் பெயர். புதுப்பானை எடுத்து, மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி, புதுப் பாலில், புது அரிசியிட்டு, வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள். வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்தப் பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும். அரிசி நன்கு சமைந்து, பொங்கி வரும்போது குலவையிட்டும், பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்ற குரலோடு பொங்கல் பானையை இறக்க வேண்டும். நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவும் என்பது நம்பிக்கை. மாட்டுப் பொங்கல்.

3வது நாள் விழா மாட்டுப் பொங்கல். கிராமங்கள் தோறும் மாட்டுப் பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்படும். வீடுகள் புதுப் பூச்சு காணும். மாடுகள், பசுக்களின் கொம்புகளுக்குப் புது வர்ணம் பூசி, நன்கு குளிப்பாட்டி, அவற்றை அலங்காரம் செய்து, மாட்டுப் பொங்கல் தினத்தின்போது படையலிட்டு வழிபாடு செய்வார்கள். பின்னர் மாடுகளுக்குப் பொங்கலும் அளிக்கப்படும். ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இது கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தின்போது மாடுகளுக்கு ஒரு வேலையும் தரமாட்டார்கள். கழுத்தில் புது மணி கட்டி, கொம்புகளைச் சீவி விட்டுச் சுதந்திரமாகத் திரிய விடுவார்கள். இந்த இடத்தில்தான் ஜல்லிக்கட்டு தோன்றியிருக்கிறது. மாட்டுப் பொங்கலின்போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

தமிழரின் வீரத்தின் பிரதிபலிப்பை ஜல்லிக்கட்டு மூலம் கொண்டாடி வீரத்தை, தன்னபிக்கையை பிரதிபடுத்துவதும் இந்த மாதத்தின் சிறப்பு.

தமிழர்களின் திருநாளாக, உழவர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை, தமிழர்கள் தை மாதத்தின் பிறப்பை தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும் நினைவு கொள்கிறார்கள்.  தமிழர்கள் அனைவரும் இந்த இனிய நாளை, இரட்டிப்பு சந்தோஷத்துடன், தித்திப்புடன் கொண்டாட வாழ்த்துவோம்.

அதேசமயம், பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் பட்டு வரும் பல்வேறு அவதிகள் ஒழிந்து, அவர்களின் விடுதலைக்கும், வரும் ஆண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் வாழவும் இந்தத் திருநாளில் பழையதை எல்லாம் எரித்து, புத்துணர்வுடன் இந்தப் புது வருடத்தை வரவேற்போம்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்று முழக்கம் இட்ட பாவேந்தர் பாரதிதாசன் பாடலிற்கு இணங்கத் தமிழர் பெருமையை உலகுகக் சொல்லும் இப்பண்டிகையின் பெருமையை நாமும் உணர்ந்து மற்றவர்களுக்கும் சொல்லி நம் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம்.

: தமிழீழ மக்கள் பேரவை -பிரான்சு

Thiruchchothi
Responsable Bureau Politique
mte.france@gmail.com
06 52 72 58 67

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here