வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான கொடிச்சீலை இன்று எடுத்துவரப்பட்டது. சம்பிரதாய முறைப்படி வருடந்தோறும் நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த மஹோற்சவத்துக்கான கொடிச்சீலை செங்குந்த மரபு மக்களால் உற்சவத்துக்கு முதல்நாள் கையளிக்கப்பட்டுவருவது வழமை.
வழமைபோன்று இராமலிங்கம் வீதியில் அமைந்துள்ள கொடிச்சீலை உபயகாரரின் இல்லத்தில் இருந்து காலை 7.30 மணியளவில் மங்கள வாத்தியங்களுடன் எடுத்துவரப்பட்ட கொடிச்சீலை சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வேல்முருகன் கொடித்தேர் மடத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான் சந்நிதியில் வைத்து விசேட பூசைகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் பக்தர்கள் புடைசூழ பாரம்பரிய முறைப்படி சித்திரத்தேரில் வைத்து எடுத்துவரப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியாரிடம் நண்பகல் 10 மணியளவில் கையளிக்கப்பட்டது.