அமெரிக்காவின், நியுயோர்க் நகரில் உள்ள அடுக்குமாடி (Bronx) குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு மரணமடைந்தவர்களில் சிறுவர்கள் 9 பேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (09) இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 32 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இதில் சிலரது நிலை மோசமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சூட்டை பெறுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணத்தில் ஏற்பட்ட கோளாறு (malfunctioning electric space heater) காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
19 மாடிகளைக் கொண்ட குறித்த தொடர்மாடிக் கட்டடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மாடியிலிருந்து இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த 200 இற்கும் மேற்பட்ட தீயணைப்புத் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டதாக, நியூயோர்க் நகரின் ஆளுநர் எரிக் எடம்ஸ் ஊடகங்களுத் தெரிவித்துள்ளார்.
புகை அதிகளவில் காணப்பட்டையினால், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.