யாழ். ஆரிய குளத்தில் மதச் சின்னங்களை திணிக்க அரசு முனைந்தால் அதில் அஸ்தி கரைக்கும் நிலை வரும்!

0
294

யாழ்ப்பாணம் ஆரிய குளத்தில் மதச் சின்னங்களை திணிப்பதற்கு அரசு முனைந்தால் அதை, இறந்தவர்களின் அஸ்தி கரைக்கும் புனித நீர் நிலையாக மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக்கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் ஆரியகுளம் எமது பாரம்பரியம். அது சேற்றுக் குப்பைகளுடன் காணப்படும்போது ஒருவரும் திரும்பிப் பார்க்கவில்லை. அது யாழ்.மாநகர சபையின் முயற்சியால், தற்போது அழகாக சீரமைக்கப்பட்டு மக்கள் தமது பொழுதுபோக்கு நேரத்தை செலவழிப்பதற்காக அங்கு வருகின்றனர்.
ஆனால், வடக்கு மாகாண ஆளுநர் தற்போதுதான் தூக்கத்திலிருந்து விழித்தவர்போல புதுப் புரளியைக் கிளப்பியுள்ளார்.

ஆரியகுளம் மாநகரசபைக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்களைச் சமர்ப்பியுங்கள், சமய சின்னங்கள் தொடர்பாக வெளிப்படுத்துங்கள் என்று அவர், மாநகர சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மதச் சின்னங்கள் தொடர்பில் அவர் பிரச்சினை செய்வாரானால், மக்களின் புனித அஸ்தி கரைக்கும் இடமாக ஆரிய குளத்தை மாற்ற வேண்டி வரும். அன்று திறப்பு விழாவுக்கு வருகை தந்தவர், இப்போது விடிய விடிய ராமர் கதை கேட்பதுபோல, ஆரியகுளம் யாருடையது என்று கேள்வி எழுப்புகின்றார்.

ஆளுநர் என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வர முடியுமா? மக்களைத் துன்பப்படுத்தாதீர்கள். மக்களின் பிரச்சினையை முதலில் பாருங்கள், சம்பளத்தை எடுத்துவிட்டு முடங்கிக்கிடக்காமல் மக்களின் தேவைகளை அறிந்து செயற்படுங்கள். மதப்பிரச்சினையைத் தூண்டாதீர்கள்.வடக்கில் தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் இந்துமத ஸ்தலங்கள் ஆக்கிரமிக்கப்படும்போது எங்கு சென்றீர்கள்? இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கும் ஆக்கிரமிப்புக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அவை உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?
ஆளுநரைக் கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இல்லையென்றால் இவர் போகும் இடம் எல்லாம் பிரச்சினை ஏற்படும் நிலை வரும் – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here