பரந்தன் சந்தியில் கொலைசெய்யப்பட்டவரின் சடலத்தோடு மக்கள் ஆர்ப்பாட்டம்!

0
101

குற்றவாளிகளை கைது செய்து குற்ற செயல்களை கட்டுப்படுத்துமாறு கோரி கிளிநொச்சி பரந்தன் சந்தியில் கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை வீதியில் வைத்து மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்த நிலையில் பொலிஸாரின் வாக்குறுதியை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் இளைஞனின் இறுதி கிரியைகள் இடம்பெற்றதை தொடர்ந்து சடலம் மக்கள் பேரணியுடன் பரந்தன் சந்திவரை சென்றது.

தொடர்ந்துகுறித்த பகுதியில் ஏ9 வீதியை மறித்து இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என பல்வேறுபட்ட வயதை சேர்ந்தவர்கள் இணைந்து வீதி மறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த போக்குவரத்திற்காக மாற்று வழிகள் பொலிஸாரினால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக பெருமளவான பொலிசார் வரவழைக்கப்பட்ட போதிலும் அவர்களை கட்டுப்படுத்த பொலிஸாரால் முடியாது போனது.

தொடர்ந்து குறித்த போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும், குடும்பத்தினரிடமும் கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஏற்கனவே ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பரந்தன் சந்தியில் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைப்பதாகவும், ஏனையவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.

இதேவேளை குறித்த விடயங்களை உள்ளடக்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஒப்பத்துடன் கடிதம் ஒன்றும் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது

இதேவேளை குறித்த விடயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்து பொலிஸ் அத்தியட்சகர் கையெழுத்திட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கையளித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்று உயிரிழந்தவரின் இறுதி கிரியைகளில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here