கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் வாயுச் சீராக்கியை (A/C) பழுது பார்த்துக்கொண்டிருக்கையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வெடிப்பு சம்பவம் இன்று (04) பிற்பகல் 1.45 மணியளவில் ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி இரண்டாம் இராஜசிங்க மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வாயுச் சீராக்கியின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் இச்சம்வபம் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை வரகாமுற பிரதேசத்தில் குளிரூட்டிகளை திருத்தும் பணியில் ஈடுபடும் தொழிநுட்பவியாளரான, மொஹமட் ஹிஷாம் எனும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு பலத்த தீக்காயங்களுடன் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
வாயுச் சீராக்கியில் காணப்படும் கேஸ் அழுத்தம் குறைந்துள்ள நிலையில் அதனை மீள்நிரப்பும் வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாயுவின் அழுத்தம் கூடியதால் திடீரென வெடிப்பு ஏற்பட்டு இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர் ஹோட்டலில் பணிபுரிபவர் அல்ல என்றும், குளிரூட்டியை பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிறுவனத்தால் அவர் ஹோட்டலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேற்குறித்த விடயம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.