2022 இல் எமது தேசம் நோக்கிய இலட்சியத்தை வென்றெடுக்கும் நம்பிக்கையுடன் பயணிப்போம்!

0
423

                               01.01.2022

“ தன்னுடைய குமுகாயத்தின் மேல் உள்ள அக்கறை கொண்ட தமிழர்கள் குறைந்து கொண்டே வருகின்றார்களா?என்ற ஐயப்பாடு தோன்றியபோது, 2021 தேசிய மாவீரர்நாளில் எம் மக்களின் எழுச்சி மிக்க பங்களிப்பைக் கண்டு மனதில் உறுதிகொண்டோம்’’.அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! எமது புரட்சிகர வணக்கம். பிறக்கும் 2022 புத்தாண்டு , எமது தேசமக்கள் நிம்மதியுடனும் சந்தோசத்துடனும் சுதந்திரக்காற்றைச் சுவாசித்து, எமது தேசம் நோக்கிய இலட்சியத்தை வென்றெடுக்கும் நம்பிக்கையுடன் பயணிப்போம். இதற்கான வல்லமையையும், வாழ்வையும் எம் மாவீரர்கள் தமிழ் மக்களுக்குத் தந்து துணையிருப்பார்கள் என்பது உறுதி.2019 இலிருந்து மகுடநுண்ணிப் பேரிடர் (Covid-19) மாறி மாறி பல்வேறு வடிவங்களில் உலகம் முழுதும் உயிரழிவுகளையும் பின்னடைவுகளையும் விளைவித்து வருகிறது. எனினும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு எமது இலட்சியப் பயணத்தை மேற்கொண்டே வருகின்றோம்.  இவ்விடர்மிகு சூழ்நிலையிலும் அரசியல் வழியில் இணக்கமாகவும் இறுக்கமாகவும் பயணிக்க வேண்டியவர்களாக உள்ளோம்.  அரசியல், கல்வி கலை, பொருண்மியம் , விளையாட்டு, மனிதநேயம், தொழில்நுட்பம் போன்ற அனைத்துத் துறைகளிலும் எமது பலம் இன்னும் சிறப்பாக முனைப்புப் பெற வேண்டிய நிலையில் அனைத்துத் தரப்பினரும் செயற்பட மனதில் திடசங்கற்பம் கொள்வோம்.அன்பான தமிழீழ மக்களே! எமது உரிமைப் போராட்டம் அறவழியிலும், ஆயுதவழியிலும் போராடி 74 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் இந்துசமுத்திரப் பிராந்தியத்திலும், பசுபிக் சமுத்திரப் பிராந்தியத்திலும் நடைபெறும் வல்லரசுகளுக்கிடையேயான போட்டிக்குள்ளும் மதியென்னும் கூர்மையாலும் அறிவெனும் ஆயுதத்தாலும் வென்றே ஆகவேண்டும். இதுவே காலம் எமக்கிட்ட கட்டளையாகும். 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் அதிலொரு வரைவாகக் கருதப்படும் 13 ஆவது திருத்தச்சட்டம் ஒரு பன்னாட்டு ஆவணமாகக் கருதப்படுகின்றது. 35 வருடங்களுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் முதற்கொண்டு அனைத்துத் தமிழர்கள் தரப்பாலும் இதனையொரு அரசியல் தீர்வின் ஆரம்பப்புள்ளியாகவே எடுக்க முடியாது என்று நிராகரிக்கப்பட்டது.  ஒற்றை ஆட்சிக்குள் தமிழினத்தின் இறையாண்மையை முடக்கும் இந்த ஏற்பாடு தமிழர்களுக்கு எதையும் தந்துவிடப்போவதில்லை என்பதை தெரிந்துகொண்டும் தமிழ்த் தலைமைகள் தமது பதவி இருக்கைக்காக தொடர்ந்தும் அதையொட்டியே பேசிவருகின்றனர். இது கேள்விக்குறியையும் ஏமாற்றத்தையும், தார்மீகமான கோபத்தையும் தமிழ்மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. 1987 வரை எமது மக்கள் கொடுத்த உயிர்விலைகளுக்கு மத்தியிலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத இந்த ஏற்பாடு, 2009 வரை கொடுக்கப்பட்ட பல லட்சம் உயிர்விலைகளுக்கு பின்பு எவ்வாறு ஓர் ஆரம்பப் புள்ளியாகப் பார்க்க முடியும். இத்தனை காலம் எதையும் செய்யாத இத்தீர்மானத் திருத்தச்சட்டம் இன்று திருப்பிக் கையில் எடுத்திருப்பது காலத்தையும், நேரத்தையும் மக்கள் மனங்களையும் வீணடித்து, நோகடித்து விரக்தியையும், எதுவும் வேண்டாம் என்ற நிலைக்கு கொண்டு செல்லும் நிலையையும் உருவாக்குகின்றார்களா என்ற ஐயத்தைத் தோன்றவைக்கிறது. தாயகத்தில் விதையாகிப்போனவர்களின் வீரியம் எவ்வாறு அனைத்துத் தடைகளுக்கு மத்தியிலும் வீறுகொண்டு நின்றது என்பதை கண்கூடாகக் கண்டுகொண்ட இவர்கள் அனைத்துத் தமிழ் மக்களின் கொதிப்பிற்கும், கோபத்திற்கு விரைவில் பதில் சொல்ல வேண்டிய நிலையை உருவாக்கிக் கொண்டு வருகின்றனர்.  இதன் தொடராக புலத்தில் தமது தேசத்தின் விடுதலைக்காக அர்ப்பணிப்போடும் நம்பிக்கையோடும் உழைத்துவரும் தேசவிடுதலைப் பற்றாளர்களுக்கும், அவர்களுக்குத் துணையாக இருக்கும் இளையவர்களின் உணர்வுகளை, உண்மைக்கு மாறாகவும், நேர்மாறாகவும் பயணப்பட முனையும் தாயக அரசியல் வாதிகள் உணர்ந்து கொள்வார்களா? இந்த அரசியல் விலைபோனவர்களின் உண்மை முகத்தை காட்டி வெளியேறிய அரசியல் தலைவர்களும் தமது போராட்டத்தை உள்ளுக்குள் இருந்தே போராட வேண்டிய நிலையில் இருந்துவருவதையும் நாம் உணர்ந்து கொள்வோம். இந்தவகையில் 2008 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மாவீரர்நாள் கொள்கைப் பிரகடனத்தில் தெளிவாகக் கூறியிருந்தார். “ வரலாற்றுச் சூழமைவில் தமிழர் உலகில் எங்கு வாழந்தாலும் எமது தேச விடுதலைக்காக உறுதியாக குரலெழுப்பி எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறும், தங்களது தாராள உதவிகளை தொடர்ந்து பங்களிக்குமாறும் உரிமையுடன் கேட்டுக் கொண்டார்.” இந்தியாவையும், தமிழர்களையும் ஏமாற்றும் இத்தீர்வுத் திட்டத்தை தமிழீழத் தேசியத்தலைவர் நிராகரித்து, சுதுமலைப்பேச்சிலும் வெளிப்படுத்தியிருந்தார். அதற்கு பதிலீடாகவே பிரான்சு , பாரிசு மண்ணிலே இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைபை 2003 இல் காத்திரம் வாய்ந்தவர்களின் ஆலோசனையுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்குழுவுடன் வரைந்து சர்வதேசத்திற்கு முன்வைத்திருந்தார் என்பதையும் நாம் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும்.எம் அன்பான பிரான்சுவாழ் தமிழீழ மக்களே! தாயகத்தின் எமது அரசியல் நிலைப்பாடு ஒரு புறமும், நாம் வாழும் பிரான்சு நாட்டின் அதிபர் தேர்தலும் சூடுபிடித்துள்ள நிலையில் எதிர் வரும் ஏப்பிரல் மாதம் 10 ஆம் நாள் முதல் 21 ஏப்பிரல் வரை நடைபெறவுள்ள இத்தேர்தலும் ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரை முக்கியமானதாகவே பார்க்கப்படுகின்றது. பிரான்சு தேசமானது இங்கு வாழும் எமது மக்களுக்கு அரசியல் ரீதியாகவும், மனிதாபிமான ரீதியிலும் பலவழிகளில் எமது உணர்வுகளை புரிந்துகொண்டு உதவியே வந்திருக்கிறது. அதன் சாட்சியின் அடையாளங்கள் கூட ஒவ்வொரு மாநிலத்திலும் மாநகரத்திலும் இருப்பதைக் காண்கின்றோம். இவைகள் எமது இனத்திற்கு நம்பிக்கையும் நாம் இருக்கின்றோம் உங்களுக்கு என்ற செய்தியாகவுமே அனைவரும் பார்க்க வேண்டும். எனவே வரப்போகும் நாட்டின் அதிபர் தேர்தலில் வாக்குரிமை கொண்ட அனைத்துத் தமிழ்மக்களும் வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்று அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். வருங்காலத்தில் எமது இளையவர்களின் வளர்ச்சிப்பாதையில் இதுவொரு மைல்கல்லாகவும் அமைகிறது என்பதையும் கவனத்திற்கொள்வோம். நன்றி!“ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ’’தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here