
“கிளிநொச்சி அம்பாள்குளத்தில் தனித்திருந்த மூதாட்டியிடமிருந்து நகைகளை அபகரிக்கவே அவரை அடித்துக்கொன்றேன்” என்று, குறித்த பெண்ணின் கொலை தொடர்பான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 22 வயது இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளாரென காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த மூதாட்டியிடம் கொள்ளையிடப்பட்ட நகைகளும் சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
கொலைசெய்த பின்னர், சடலத்தை சந்தேகநபர் உரப்பையொன்றில் போட்டுக் கட்டியுள்ளார். நண்பர் ஒருவரை அலைபேசியில் அழைத்து, அவரது உந்துருளியைப்பெற்று, அதில் ஸ்கந்தபுரத்துக்கு சடலத்தை எடுத்துச்சென்று, மரப்பாலத்தின் கீழ் வீசியுள்ளார்.
மூதாட்டியிடமிருந்து கொள்ளையிடப்பட்ட ஒரு சங்கிலி, மோதிரம், ஒரு சோடி காதணி, ஒரு சோடி வளையல் என்பன காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் வீடு ஒன்றில் வசித்துவந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது -67) என்பவர் , பிரிட்டனில் தனது மகனுடன் வசித்துவந்தநிலையில், இலங்கைக்குத் திரும்பி கடந்த 3 வருடங்களாக கிளிநொச்சி உதயநகர் பகுதியிலுள்ள தனது காணியை பராமரிப்பதற்காக அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து, தனியாக தங்கியிருந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை வங்கிக்குச்சென்று திரும்பியிருந்தநிலையில் அவர் காணாமற்போயிருந்தார் என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம், யூனியன்குளம் பகுதி ஆற்றிலிருந்து உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.