
கிளிநொச்சியில் இராசேந்திரம் இராசலட்சுமி (67) என்ற பெயருடைய பெண் காணாமல் போன நிலையில் பாலமொன்றின் கீழ் உரப்பையினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீட்டு உரியைமாளரால் நேற்றையதினம் (27) மாலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்றுள்ள கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் அம்பாள்குளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன. குறித்த சந்தேகநபரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேவேளை அச்சந்தேகநபர் பொலிசாருடன் சென்று சடலத்தினை காண்பித்துள்ளார். குறித்த சடலம், சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கந்தபுரம் மரப்பாலம் பகுதியில் பொதி செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது.

அத்தோடு அப்பாலத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த சடலத்தினை இன்னொருவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து அப்பாலத்தில் வீசியுள்ளதாக விசாரணைகளில் தெரியவருகின்றது. இதேவேளை குறித்த சடலத்தை சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.