தென்மராட்சி மிருசுவில் பகுதியில் 52 ஏக்கர் தென்னங்காணியை பலவந்தமாக படைத்தரப்பு சுவீகரம்!

0
208

Jaffna October 2012தென்மராட்சியில் கண்டி வீதியருகே மிருசுவில் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 52 ஏக்கர் தென்னங்காணியை பலவந்தமாகக் கையகப்படுத்திய பின்னர், அதில் 52 ஆவது படையணியின் தலைமையகத்தை அனுமதியின்றி அமைத்துவிட்டு தற்போது அந்தக் காணியை பலவந்தமாக படைத்தரப்புக்கென சுவீகரிப்பதற்கு அரசு தரப்பில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை ஆட்சேபித்தும் அதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் கொழும்பு  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

மனுவில் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, 52 ஆவது படையணி கட்டளைத் தளபதி அனுர சுபசிங்க,காணி அமைச்சர், காணி சுவீகரிப்பு அதிகாரி ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடவும் நீதிமன்றம் பணித்தது. மேற்படி, 52 ஆவது படையணி அமைக்கப்பட்டுள்ள 52 ஏக்கர் நிலமும் தனி தென்னந்தோட்டக் காணியாக இருந்தது. ஒரு தாய்க்கும் நான்கு மகள்மாருக்கும் இது சொந்தமானது.

இந்தக் காணிக்குள் புகுந்த படையினர் அங்கிருந்த தென்னந்தோட்டத்தை அழித்துவிட்டு அங்கு தங்கள் படையணியின் தலைமையகத்தை அமைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தக் காணியை சுவீகரிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் அரசு தரப்பால் ஆரம்பிக்கப்பட்டமையை அடுத்து காணி உரிமையாளர்கள் இதனை ஆட்சேபித்து  நீதிமன்றத்தில் மனு செய்திருக்கின்றார்கள். பொதுத் தேவைக்காகத் தனியார் காணிகளை அரசு சுவீகரிக்க முடியும் என்ற சட்ட ஏற்பாட்டை மேற்கோள்காட்டியே இந்த சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மனு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு தலைமை நீதியரசர் விஜித மலகொட, நீதியரசர் டிலிப் நவாஸ் ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது மனுதாரர் தரப்பில் சட்டத்தரணிகள் கே.சயந்தன், லூயி கணேசநாதன் ஆகியோரின் அனுசரணையுடன் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகி வாதாடினார். “பொதுத் தேவைகளுக்கு தனியார் காணியை சுவீகரிக்கலாம்’என்றாலும் இராணுவத்துக்குத் தேவையான ஒன்றை “பொதுத் தேவை’என அர்த்தப்படுத்த முடியாது என்று அவர் விளக்கினார். இதனை செவிமடுத்த நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு ஏற்று எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here