மிகவும் அமைதியாகவும் நீதி நேர்மையுடன் நடந்ததாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார்!

0
127

Mahida Deshapriyaஇலங்கையின் 15 ஆவது பொதுத் தேர்தல் மிகவும் அமைதியாகவும் நீதி நேர்மையுடன் நடந்ததாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அறிவித்தார். நாட்டில் புதிய அரசியல் கலாசாரமொன்று உருவாக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யும் வகையில் இந்தத் தேர்தல் அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்ததை ஊடகங்கள், மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் ஊர்ஜிதம் செய்திருப்பதோடு திருப்தியும் தெரிவித்துள்ளதாக தெரிவித்த தேர்தல் ஆணையாளர்,

“பாரிய சம்பவங்களும் இல்லை. பெரிய முறைப்பாடுகளும் இல்லை” எனக் கூறினார்.

உண்மையான ஜனநாயகத் தேர்தலில் வெற்றியும் தோல்வியும் சகஜம். வெற்றியை அமைதியாகக் கொண்டாடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

இலங்கை தேர்தல் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். உத்தியோகப் பற்றற்ற அறிவிப்பின்படி, நாடு முழுவதும் 60 – 65 வீதமானோர் வாக்களித்திருப்பதாகத் தெரிய வருகிறது.

நேற்று நண்பகல் வரை சில மாவட்டங்களில் வாக்குப் பதிவுகள் மந்த கதியில் இருந்ததுடன் பிற்பகலில் வாக்குப் பதிவுகளில் சுறுசுறுப்பைக் காணமுடிந்து.

நேற்று நண்பகலில் யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை மற்றும் தெற்கில் பல மாவட்டங்களிலும் 40 ற்கும் 50 ற்கும் இடைப்பட்ட வாக்குப் பதிவுகளே இடம்பெற்ற போதும் நண்பகலுக்குப் பின்னர் பிற்பகலில் வாக்குப் பதிவுகள் சுறுசுறுப்படைந்து பொதுவாக 65 வீத வாக்குப் பதிவுகளைக் காண முடிந்தது. தேர்தல் வாக்களிப்பு தினமான நேற்று நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்தபோதும் அதனைப் பொருட்படுத்தாது மக்கள் தமது உரிமையை முழுமையாகப் பயன்படுத்தியதைக் காண முடிந்தது. நேற்று யாழ்ப்பாணம், நுவரெலியா, ஹட்டன் மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களில் மழையும் மோசமான காலநிலை நிலவின. மழை பெய்த சந்தர்ப்பங்களில் வாக்களிப்பு சற்று மந்த கதியில் இடம்பெற்ற போதும் பின்னர் நிலமை சுமுகமானது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தலோடு ஒப்பிடுகையில் மிகவும் அமைதியானதும் வன்முறைகள் மற்றும் வேறு எந்த தடைகளுமில்லாத தேர்தலாக இம்முறை தேர்தலைக் குறிப்பிட முடிகிறது.

தேர்தல் ஆணையாளரும் தேர்தல்கள் கண்காணிப்பாளர்களும் பிரதமர் உட்பட முக்கிய அரசியல் தலைவர்களும் கூட இதனை உறுதிப்படுத்தியதுடன் சகல தரப்பினருக்கும் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவுகள் ஆரம்பத்தில் மந்தகதியிலிருந்த போதும் மாலையளவில் விறுவிறுப்பானது. இதன்படி முற்பகலில் 25 சதவீதமாகவிருந்த புத்தளத்தின் வாக்குப் பதிவுகள் மாலையளவில் 66.5 சதவீதமாக அதிகரித்தது.

அதேபோன்று அநுராதபுரத்தில் ஆரம்பத்தில் 50 சதவீதமாகவிருந்த வாக்குப் பதிவு பிற்பகல் 4 மணியளவில் 70 சதவீதமாக அதிகரித்தது.

நேற்றைய தினம் கேகாலையில் 70 தொடக்கம் 75 சதவீதமான வாக்குப் பதிவும் திருகோணமலையில் 75 சதவீதமான வாக்குப் பதிவும் அம்பாறையில் 65 சதவீதத்திற்கு அதிகமான வாக்குப் பதிவும் இடம்பெற்றிருந்தன.

காலியில் 70 சதவீத வாக்குப் பதிவும் கண்டியில் 75 சதவீத வாக்குப் பதிவும் களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப் பதிவும் மன்னாரில் 65 சதவீதம் யாழ்ப்பாணத்தில் 60 சதவீதமும் பொலன்னறுவையில் 75 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

சுதந்திர இலங்கையின் 15 வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4.00 மணிக்கு நிறைவுபெற்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போலனறுவையிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழக வாக்களிப்பு நிலையத்திலும் நமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

நேற்றைய தேர்தலில் குறிப்பிடத்தக்க எந்தவொரு வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறவில்லை என்பதை தேர்தல் ஆணையாளரும் பொலிசாரும் உறுதிப்படுத்தினர்.

இம்முறை தேர்தலில் 35 அரசியல் கட்சிகளும் 201 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டன. மொத்தமாக 196 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 6,151 வேட்பாளர்கள் களமிறங்கி இருந்தனர்.

நாடளாவிய ரீதியில் 12,134 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றுள் வட மாகாணத்திலுள்ள ஏழு சிறு தீவுகளும் உள்ளடங்குகின்றன.

15,440,491 வாக்காளர்கள் இம்முறைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். தேர்தலையொட்டி நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத் தப்பட்டிருந்தன. தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 70,543 பொலிசாரும் 4,825 விசேட அதிரடிப் படையினரும் அவர்களுடன் சிவில் பாதுகாப்புப் படை பிரிவினர் 7000 பேரும் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

மலையகப் பிரதேசங்களில் நேற்று கடும் மழை மற்றும் காலநிலை சீர்கேடுகளுக்கு மத்தியிலும் சுமுகமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 65 வீத வாக்களிப்பு இடம்பெற்றதாகவும் தோட்ட நிர்வாகங்கள் வாக்களிப்புக்கான நேரங்களைத் தொழிலாளர்களுக்குத் தடையின்றி வழங்கியுள்ளதாகவும் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

சில தோட்டங்களில் முற்பகலிலும் மற்றும் சில தோட்டங்களில் பிற்பகலிலும் வாக்களிப்புக்கான நேரங்கள் வழங்கப்பட்டி ருந்தன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு தோட்டத் தொழிலாளர்கள் வாக்களிப்பில் சுறுசுறுப்பாக ஈடுபட்டதாக எமது பிராந்திய நிருபர்கள் தெரிவித்தனர். தேர்தல் முறைப்பாடுகளைப் பொறுத்தவரை தேர்தல் முறைப்பாட்டு நிலையங்களில் மிகக் குறைவான முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளது டன் பாரதூரமான குற்றங்கள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை என்பதை அந்த நிலையங்கள் உறுதிப்படுத்தின.

வாக்களிப்பை இடைநிறுத்துவது அல்லது தடைசெய்வது போன்ற எத்தகைய நடவடிக்கைகளுக்கும் இம்முறை தேர்தலில் இடமிருக்கவில்லை என்பதையும் தேர்தல் ஆணையாளர் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here