உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்கின்றனர். நத்தார் பண்டிகையை முதன்முதலில் 4 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்தேய கிறிஸ்தவர்கள் கொண்டாடினர் என்ற வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
நத்தார் பண்டிகையை கொண்டாடும் மக்கள் அன்றைய தினத்தை சிறந்த தினமாகக் கருதி புதிய பணிகளை தொடங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அன்றைய தினத்தில் பல அரசர்களின் பதவி ஏற்பு, முடிசூட்டு விழா உள்ளிட்ட சிறந்த வைபவங்கள் இடம்பெற்றுள்ளதாக வரலாற்றுக் குறிப்புகளில் காண முடிகிறது.
நத்தார் பண்டிகையில் நத்தார் கீதங்கள் சிறப்பு அடைகின்றன.
“உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக. பூவுலகில் நல் மனதோர்க்கு அமைதி ஆகுக”என்று கடவுளைப் புகழ்ந்து, வானதூதர்கள் பாடிய பாடலே முதல் நத்தார் கீதம் ஆகும்.
இதைப் பின்பற்றி இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் நத்தார் கீதங்களை ஆலயங்களில் பாடும் வழக்கமானது நான்காம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகியது.
பொதுவாக நத்தார் கீதங்கள் குழந்தை இயேசுவை வாழ்த்திப் போற்றியும் அவரது பிறப்பு, அவர் உலகிற்கு வந்த நோக்கம் போன்றவைகளை உள்ளடக்கமாகக் கொண்டும் பாடப்படுகின்றன.
அதற்கிணங்க 1847 ஆம் ஆண்டுதான் முதலாவது நத்தார் பாடல் பிரான்சில் ஆரம்பமானதாக தெரியவருகிறது. அந்த நிகழ்விலேயே ‘ஓ ஹோலி நைட்’ என்ற பிரபல ஆங்கில மொழி நத்தார் கீதம் பாடப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
நத்தார் பண்டிகைக்காக நத்தார் மரங்கள் வைத்து அலங்கரிக்கும் கொண்டாட்டங்கள் 1510 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியுள்ளன. அத்துடன் 1836 ஆம் ஆண்டில் நத்தார் பண்டிகை அலபாமா என்ற பிரதேசத்தில் முதன் முதலாக விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று உலகில் 1840 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்துதான் முதலாவது நத்தார் வாழ்த்து மடல்கள் அனுப்பும் வழக்கம் ஆரம்பமாகியுள்ளது.
நத்தார் தினம் தொடர்பில் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. அந்த நாளின் பெருமையை குறிப்பிடும் வகையில் பண்டைய காலத்தில் வாழ்ந்த பாரசீகர்களும், பாபிலோனியர்களும் வருடத்தின் சிறந்த நாளாக இந்த நத்தார் தினத்தை கொண்டாடி வந்துள்ளனர்.
அந்த நாட்டில் உள்ள அனைத்து அடிமைகளுக்கும் அன்றைய தினம் விடுதலை அளிக்கப்படும். மேலும் சிலர் தமது அடிமைகளை பரிசாக பரிமாறிக் கொண்டுள்ளனர். மேலும் சிலர் நத்தார் தினத்தில் மாத்திரம் தமது அடிமைகளுக்கு வீட்டில் முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளதாகவும் வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுகிறது.
அக்காலத்தில் ஐரோப்பியர்கள் பேய்,பிசாசு,அசுத்த ஆவிகள் ஆகியவற்றுக்கு மிகவும் பயந்தனர். வருடத்தில் நீண்ட இரவு கொண்ட தினங்களிலேயே அவை மக்களுக்கு தீமை விளைவிக்கும் என்று நம்பினர். அதனால் நீண்ட இரவுகளுக்குப் பிறகு சூரியன் உதிக்க வேண்டும் என்பதற்காக நத்தார் பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர் என்பதும் சிறந்த குறிப்புதான்.
நத்தார் பண்டிகையை இன்றைய தினம் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் உரித்தாகட்டும்!
-லோரன்ஸ் செல்வநாயகம்