பிரான்சில் 16.12.2011 அன்று சாவடைந்த எல்லோராலும் மாமா என்று அன்போடு அழைக்கப்படும் ஈழமுரசு இதழை வெளிக்கொண்டுவந்த பூபாளம் நிறுவனம் மற்றும் ஊடக இல்லத்தின் தலைவர் நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 10வது ஆண்டு நினைவு நிகழ்வு கடந்த 16.12.2021 வியாழக்கிழமை அன்று Lemeil Brevannes நகரில் அமைந்துள்ள அவரது கல்லறையில் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பொதுச் சுடரை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனையின் துணைப்பொறுப்பாளர் திரு. பாக்கியநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். அமைதி வணக்கத்தை தொடர்ந்து ஈகைச் சுடரை பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் துணைவியார் அவர்கள் ஏற்றிவைத்தார். மலர்மாலையை அவரது பிள்ளைகள் அணிவித்ததைத் தொடர்ந்து, வருகைதந்திருந்தவர்களால் சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா அவர்கள் கலந்துகொண்டு நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்.
அவர் தனது உரையில் தெரிவித்திருந்ததாவது, எங்களோடு வாழ்ந்து, எங்களோடு தேசத்தின் விடுதலையை நெஞ்சிலே சுமந்து, தன்னுடைய வயதை தன்னுடைய குடும்ப நிலைமையை ஒரு பக்கம் வைத்துவிட்டு தாய் நாட்டின் விடுதலையை நேசித்து மறைந்துபோனவர் பிரான்சிஸ் மாமா.
ஈழவிடுதலைப் போராட்டத்திலே ஒவ்வொரு தமிழ் மகனுக்கு இருக்கவேண்டிய பற்றுதலும், பெரும் விருப்பும், நம்பிக்கையும் ஒரு குறிப்பிட்ட மக்களிடமே காணப்பட்டது. அந்த மக்களை வழிநடத்திச் சென்றதில் அதற்காக உழைத்ததில் பிரான்சிஸ் மாமாவிற்கும் மிகப்பெரிய பங்கு இருக்கின்றது.
அவர் இறுதிவரை விடுதலையை நேசித்தார். பெரும் நம்பிக்கையோடு மக்கள் இந்த விடுதலைப் போராட்டத்தைக் கொண்டு நடத்தவேண்டும், எங்களுடைய மண், எங்களுடைய விடுதலை, எங்களுடைய வருங்காலத் தலைமுறையின் சுதந்திரம் எல்லாமே இந்த இனத்தினுடைய கைகளில் இருக்கின்றது. அவற்றை எத்தனை துயர்கள் வந்தாலும் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அவற்றை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் விடுதலைக்காக உழைக்கவேண்டும் என்று அவர் தன்னையும் இணைத்துக்கொண்டு இறுதி வரை வாழ்ந்திருக்கிறார். அவரது உழைப்பிற்கான மதிப்பைத்தான் நாட்டுப்பற்றாளர் என்று தேசம் வழங்கி மதிப்பளித்திருக்கிறது.
ஆனாலும், நாங்கள் ஆண்டுதோறும் மாவீரர்களையும் இனப்பற்றாளர்களையும் மண்ணில் விதைத்து அவர்களுக்கான சடங்குகளைச் சரிவரச் செய்துகொண்டிருப்பதற்கும் அப்பால், இவர்களும் மாவீரர்களும் மாவீரர்களுக்கு கேடயமாக விளங்கிய மக்களும் எந்த நோக்கத்திற்காக தங்கள் உயிர்களை ஆகுதியாக்கினார்களோ அந்த நோக்கத்திற்காக நாம் இன்னும் பல மைல் தூரம் செல்லவேண்டியவர்களாக இருக்கின்றோம். அந்தப் பயணத்திற்கு தடையாக பல்வேறு இடர்களையும் நெருக்கடிகளையும் புறச்சூழல்கள் எங்களுக்கு ஏற்படுத்தினாலும் அவற்றை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, இவர்கள் கண்ட கனவும் இலட்சியமும் வெற்றிபெற நாங்கள் எல்லோரும் இணைந்து பணி செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இந்த இலட்சியவாதிகளின் கனவு நிறைவேறும் வரை, எங்கள் மண் விடுதலை அடையும் வரை உழைக்கவேண்டும். அதுவே நாங்கள் இவர்களுக்கு செய்யும் அஞ்சலியாக இருக்கும் என்று திரு.மேத்தா அவர்கள் தனது உரையில் தெரிவித்திருந்தார்.