முகமாலையில், எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்ட பகுதியில், இன்று காலை அகழ்வாராய்வு இடம்பெறவுள்ளது.
போர் இடம்பெற்ற காலத்தில், குறித்த பகுதி, தமிழீழ விடுதலைப் புலிகளும் படையினரும் நீண்டகாலமாக சமராடும் இடமாக விளங்கியது. வெடிபொருள்களும் அங்கு புதைக்கப்பட்டுள்ள நிலையில், மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை வெடிபொருள்களை அகற்றும்போது மண் அணைப் பகுதியிலிருந்து துப்பாக்கிகளும் எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டன. அதனையடுத்து கண்ணிவெடியகற்றும் பணி இடைநிறுத்தப்பட்டு பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
அதுமட்டுமன்றி, குறித்த பகுதி பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு, கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் குறித்த விடயம் அறிக்கையிடப்பட்டது.
இந்தநிலையில், நீதிவான், கிளிநொச்சி மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி, பளை பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் பரிசோதகர், இராணுவத்தினர், ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் குறித்த இடத்தை நேற்றுப் பார்வையிட்டனர். இன்றுகாலை அங்கு அகழ்வுப் பணி மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
(நன்றி:உதயன்)