.
இன்று மதியம் 12 மணியளவில், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்திருந்தது. முக்கிய ஆலோசனைக்கூட்டத்திற்காக பல உயர் ராணுவ அதிகாரிகள் இதில் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஹெலிகாப்டரில் பயணித்துள்ளளனர்.
முக்கிய ராணுவ உயரதிகாரிகள் 14 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். இதில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விபத்தை நேரில் பார்த்தவர்கள் பேசுகையில், ”ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விழுந்தது. லாரியை கவிழ்த்து போட்டது போல இருந்தது. சம்பவ இடத்தில் உடனே தீ பிடித்துவிட்டது. தீ மட்டும் பிடிக்காமல் இந்திருந்தால் எல்லோரும் தப்பியிருப்பார்கள். மரத்தில் மோதி விழுந்ததும் தீ பிடித்ததுதான் உயிரிழப்புக்கு காரணம். வானிலை வேறு மோசமாகத்தான் இருந்தது” என்றார்.
நேரில் பார்த்த மற்றொருவர் கூறுகையில், ”ஹெலிகாப்டர் வந்துகொண்டிருந்தது, அங்கிருந்த பெரிய மரத்தில் மோதியது. உடனே பெரும் சத்தம் எழுந்தது. நான் பயந்துவிட்டேன். தீபிடித்து அந்த பகுதி முழுவதுமே புகைமண்டலமாக மாறிவிட்டது. அதீத சத்தத்துடன் ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றியதைப் பார்த்தேன்” என்றார்.