முல்லைத்தீவு கடலில் நீராடிக் கொண்டிருந்த மூவர் கடலில் மூழ்கி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவரைத் தேடும் பணி தொடர்வதாக முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு சென்ற நான்கு பேர் முல்லைத்தீவு கடலில் நீராடிய போது அலை இழுத்துச் சென்ற நிலையில் மூவர் காணாமல் போயினர்.
அவர்களை கடலில் தேடியும் காணாதமையால் முல்லைத்தீவு காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, காவல்துறையினர், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவரைத் தேடும் நடவடிக்கை தொடர்கிறது. அவர்களுடன் கூடச் சென்ற பெண் முல்லைத்தீவு பொலிசாரால் அழைத்து செல்லப்பட்டு அவரிடம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது வவுனியா மதகுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த 27 அகவையுடைய மனோகரன் தனுசன், தோணிக்கல் வவுனியாவினை சேர்ந்த 26 அகவையுடைய விஜயகுமாரன் தர்சன், வவுனியா மதவுவைத்தகுளத்தினை சேர்ந்த 26 அகவையுடைய சிவலிங்கம் சகிலன் ஆகியோரே கடலில் காணாமல் போன நிலையில் சுமார் ஒரு மணிநேரம் கடந்து மாலை 6.30 மணியளவில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
மனோகரன் தனுசன் என்ற இளைஞனின் உடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் காணாமல் போன ஏனையவர்களை தேடும்பணி மக்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
(எரிமலையின் செய்திப் பிரிவு)