இலங்கையில் இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் நடத்தப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், சாட் சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில் இடம்பெற்ற விவாதத்துக்குப் பதிலளித்து உரையாற்றிய போதே பிரித்தானிய வர்த்தக அமைச்சர் லிவிங்ஸ்டன் பிரபு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது பதிலுரையில் மேலும் தெரிவிக்கையில், பிரித்தானியா மற்றும் இலங்கையின் செழிப்புக்கு வர்த்தகம் என்பது முக்கியமான போதிலும்,
சுயாதீனமான வர்த்தக உறவுகளுக்கு செல்வதற்கு முன்பாக, மனிதவுரிமைகள் தொடர்பிலான கடப்பாடுகளும் எம்முன் உள்ளன.
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான தீர்மானத்துக்கு பிரித்தானியா ஆதரவு வழங்கியிருந்தது.
இலங்கை மீது கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானம், நல்லிணக்கம் மற்றும் மனி தவுரிமைகள் நிலையில் முன்னேற்றத்தை எட்டும்படி இலங்கை அரசாங்கத்தைக் கோரியிருந்தது.
இத்தீர்மானம் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது இருதரப்பினா லும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு ஆணை வழங்கியுள்ளது.
ஐ.நாவின் இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் படியும், இந்த விசாரணையில் சாட்சியம் அளிப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படியும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியமர்வு தொடர்பில் தமது சொந்த ஆணைக்குழு பரிந்துரைத்தவைகளை நடைமுறைப்படுத்தும்படியும் நாம் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்க ப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் நீதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதற்கு, சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைக்கும்படி நாம் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
இத்தேர்தலைக் கண்காணிப்பதற்காக இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுநலவாய மற்றும் சார்க் அமைப்பின் கண்காணிப்பாளர்களை அழைத்திருப்பதை நாம் வரவேற்கிறோம் என்று அவர் தனது பதிலுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.