பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு மாவீரர் நாள் அன்று அறிக்கை ஒன்றை வெளிட்டிருந்தது. அதன் முழு வடிவம் வருமாறு:-
அன்புக்கும், மதிப்பிற்குமுரிய பிரான்சு வாழ் தமிழீழ மக்களே வணக்கம், நவம்பர் 27 தமிழீழத் தேசிய மாவீரர்நாள்! தமிழரின் வணக்கத்திற்குரிய நாள்!! ஆயிரமாயிரமாய் தமிழீழ விடுதலைக்காய் வித்தாகிப் போய் மிளிரும் மாவீரர்களுக்கு நாம் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்தி கௌரவிக்கும் புனித நாள். இன்றைய நாள் இழப்பிற்காகக் கலங்கி அழும் நாள் அல்ல. அன்றி துயரத்தில் துவண்டு போகும் நாளுமல்ல. இன்று வீரமறவர்களின் திருநாள்…. பெருநாள்…. நமது இனம், இறைமையுடன் சுதந்திர வாழ்வு வாழவேண்டும் என்ற வேணவாக் கொண்டு தங்கள் இளமையையும், வாழ்வையும், உயிரையும் ஈகம்செய்த மறப் புதல்வர்களை நினைவில் நிறுத்திப் பூசிக்கும் நாள். தமிழினத்தின் விடுதலைக்காக நாம் கொடுத்த விலை அளப்பரியது. உலகில் எந்த விடுதலை இயக்கமும் கொடுக்காத அளப்பரிய தியாகங்களைச் செய்து தியாகத்தின் உச்சியைத் தொட்டோம். உலக அரங்கில் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் உன்னதமான இடத்தைத் தேடிக்கொண்டோம். இம்மகோன்னத பெருமையைத் தேடித் தந்தவர்கள் எமது மாவீரர்களே. விடுதலை என்பது மானிடத்தின் அதி உச்ச விழுமியம். அந்த விழுமியத்தை நெஞ்சில் இலட்சியமாக ஏந்தி பயணித்தவர்கள் எமது மாவீரர்கள். அவர்களின் வாழ்வும் வரலாறும் எமது விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள். இவர்களை நெய்விளக்கேற்றி மலர் தூவி வெறுமனவே கடந்து சென்றுவிட முடியாது. அவர்களின் அப்பழுக்கற்ற எண்ணத்தை, ஆன்மாவின் அவாவை எம் நெஞ்சில் நிறுத்தி அவர்கள் பாதையில் பயணிப்போம் என்று இப்புனித நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம். அன்பார்ந்த பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! 2021 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் நாம் நிற்கின்றோம். இன்னும் கோவிட் பேரிடர் நீங்கி இயல்பான வாழ்வை அனுபவிக்க முடியாத நிலையிலும்; தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமது பணிகளைச் சுகாதார விதிக்கமைவாகவும் குறைந்த வளங்களுடனும: அதிஉச்ச பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வரலாற்றின் போக்கில் தலைவர்கள் மக்களால் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால், இன்று தலைவர்களென்று தம்மை முன்னிலைப்படுத்தி முன்வருவதையிட்டு; நாம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் எம்மைக் குழப்புவதிலும், மடை மாற்றுவதிலும் சில சக்திகள் முனைப்புக் கொண்டிருக்கின்றன. எம்மோடு இருந்தவர்களே எமக்கெதிரான செயற்பாடுகளில் போலிக் கடிதத் தலைப்புடன் அறிக்கைகளையும், தெரிவுகளையும் இணைய வெளியில் எம்மிடையே பரப்பி வருகின்றனர். இது எமது இயக்க மரபுக்கு முரணான செயற்பாடாகும். இப்படியான பல சவால்களையும், சிக்கல்களையும் விடுதலை வரலாற்றில் நாம் சந்தித்துள்ளோம். அவைகளை வென்று நாம் பயணிப்பதற்கு மக்களாகிய நீங்கள் எம்மீது கொண்டிருந்த நம்பிக்கையும்,தெளிவும் எமக்கு பக்கபலமாக இருந்துள்ளது. இப்படியான சவால்களும், குழப்பங்களும் இன்று மட்டுமல்ல எதிர்காலத்திலும் தொடரும் அவைகளை இனம்கண்டுகொள்வதில் தமிழ்மக்களாகிய நாம் விழிப்பாக இருத்தல் வேண்டும.; இத்தனையையும் தாண்டித்தான் எமது பணியை முன்னெடுக்க வேண்டியுள்ளது. எமது கல்விப் பணிகளில், அரசியல் பணிகளில் பல இடர்களை நாம் சந்தித்தபோதும் எமது மக்களின் நலனிற்கு முன்னுரிமை கொடுத்து தெளிவோடும், தூரநோக்கோடும் முடிவுகளை எடுத்துத் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருகின்றோம். அதற்கான ஆதரவையும் நீங்கள் தந்துள்ளீர்கள், தருகின்றீர்கள். அன்பார்ந்த பிரான்சு வாழ் தமிழீழ மக்களே, இன்று, சிங்கள வாக்குகளால் தெரிவான சிறிலங்கா அரசாங்கம் சிங்களவர்களாலேயே துரத்தப்படும் நிலை உருவாகி உள்ளது. பொருளாதாரம் அதல பாதாளத்தைத் தொட்டு நிற்கிறது. படித்தவர்களுக்கு வேலை இல்லை. அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட வாக்குகள் நிறைவேற்ற முடியாத நிலை. சீனாவிடம் நாட்டை விற்றபோது பேசாது இருந்தவர்கள் சீனாவை வெளியேற்றப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை ஈடு செய்ய புதிய பணத்தாள்களை அச்சிட்டு வரும் அரசாங்கம். அத்தோடு நாடு முழுவதிலும் தொடர் போராட்டங்கள். இவைகள் அனைத்தையும் திசை திருப்ப ‘ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கோசத்தில் சனாதிபதி ஆணைக் குழு அமைத்து அதற்கு இனத்துவேசம் கொண்ட பிக்குவை கடும் காவல் தண்டனையில் இருந்து பொதுமன்னிப்பு கொடுத்து விடுதலை செய்து தலைமை தாங்க விடப்பட்டுள்ளார். இச்செயற்திட்டத்தினூடாக சிறுபான்மையினரின் தனித்துவத்தை அழிக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதுடன், இனவெறியைத் தூண்டி ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்த முனைகிறது சிங்களப் பேரினவாத அரசு. இத்தனை இடர்பாடுகளோடு தமிழர் பிரதேசங்களில,; தமிழருக்கெதிரான செயற்பாடுகள் உச்சம் பெற்றுள்ளது. தமிழரின் உரிமைகளை சட்டத்தின் துணைகொண்டு பறித்து வருகிறது. காணி சுவீகரிப்பு, கடற்தொழில் பாதிப்பு, இராணுவ செறிவாக்கத்தை ஏற்படுத்தி சிங்கள குடியேறற்ங்களை நிறுவுதல், தொல்பொருள் திணைக்களத்தின் கபளீகரம், வனவளபிரதேச சபையின் நில அபகரிப்பு எனத் தொடர்ந்துகொண்டு போகிறது. ஒவ்வொரு நிமிடமும் கைநழுவி காணாமல் போய்க்கொண்டிருக்கிறது தமிழரின் எல்லைகள். இதனை எதிர்த்து சிவில் அமைப்புகள் இணைந்து நடாத்திய ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” யான போராட்;டத்தை மக்கள் எழுச்சியுடன் கலந்து பலப்படுத்தினார்கள். வெற்றிக்குத் தமிழரசுக் கட்சி உரிமை கோரிக் குழப்பம் விளைவித்தது;. தமிழ் கட்சிகள் அனைத்தும் தமக்கான ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் தமக்குள் பிணக்கும், உறவும் கொண்டுள்ளன. மக்கள் நலனை விட தங்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளனர். புலம் பெயர் வாழ் தமிழர் நாம் கட்சிகளை உரமூட்டி வளர்பதைவிட்டு மக்கள் நலனுக்காக போராடும் சிவில் அமைப்புகளை இனம்கண்டு உதவிடல் வேண்டும் என்பதை நாம் கேட்டுக் கொள்கின்றோம். விடுதலையை அடைவதென்பது எளிதானதல்ல. அது மக்களின் ஒத்துழைப்பு, எதிரியின் பலம்,நமது பலம், அண்டைய நாடுகளின் போக்கு, உலகநாடுகளின் சுயநலம், பல்வேறு அமைப்புகள், உலக பொருளாதாரம், உலக ஒழுங்கு எனப் பல காரணிகளில் தங்கி உள்ளது. இவை எப்போதும் ஒரே மாதிரியாகவும் இருக்காது. இது மாறுபட்டுக் கொண்டே இருக்கும். அதனால் நாட்டின் விடுதலை இப்படித்தான் அமையும்மென கணிதமுறையில் கணித்திட முடியாது. உலக ஒழுங்கு மாற்றத்தைக் கவனத்திற்கொண்டு எமது போராட்டங்களையும், அணுகுமுறைகளையும் நாம் கையாள வேண்டும். பிரான்சில் எம்மால் முன்னெடுக்கப்படும் அரசியல் பணிகளில் எட்டுக்கு மேற்பட்ட நகரசபைகளில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் தமிழரின்தாயகம் என்றும், அங்கு நடைபெற்றது இனப் படுகொலை என்ற பொருள்கொண்ட தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம். இதில் சங்கங்களும், இளையோர் அமைப்பும் மக்கள்பேரவையுடன் இணைந்து செயற்பட்டது பாராட்டுக்குரியது. மே 18 ஐ மையமாகக் கொண்டு மே மாதம் முழுவதும் பல நகரசபைகளின் முன்பு அப்பிரதேச அரசியலாளர்களின் பங்களிப்புடன் கண்டனப் போராட்டங்களை நடாத்தி உள்ளோம். மேலும் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரே கடிதத்தில் ஒப்பமிட்டு பிரான்சு சனாதிபதியிடம் தமிழர் நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர். பேரிடர் மத்தியில் கல்விப் பணியும் இவ்வாண்டு எமக்குள்ள வளங்களைப் பயன்படுத்தி பொதுப் பரீட்சை நடாத்தி பெறுபேறுகளை வெளிகொணர்ந்துள்ளோம். மேலும் தமிழ்ச் சோலையால் நடாத்தப்படும இணையவழி; தமிழ்ப் பட்டப்படிப்பிலும் எமது மாணவர்கள் சாதனை படைத்திருப்பதை இட்டு அவர்களுக்கு எமது பாராட்டுக்கள். ஒரு அமைப்பின் உண்மையான பலம் தலைமையில் இல்லை. அதன்கீழ்மட்ட உறுப்பினர்களிடம் உள்ளது. ‘புலிகளின் பலம் ஒரு புலி வீரனின் நெஞ்சுரத்தில் இருந்து பிறக்கின்றது”. அதேபோல் பலமான உறுப்பினர்களை வைத்து படிப்படியாக கீழ் இருந்து பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டமைப்பும் சிக்கனமாக தேவைக்கேற்ப இயங்கி அமைப்பின் வளர்ச்சிக்கு மொத்த வாயப்;புகளைப் பெருக்க வேண்டுமென இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறோம்.; அன்பான பிரான்சு வாழ் தமழீழ மக்களே! 2022 இல் எமது இயல்பு வாழ்வைத் தொடர்வோம் என்ற நம்பிக்கையோடும், எதிர்காலத்தில் மக்களாகிய நீங்கள் எங்களால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்கு ஆதரவு தந்து பங்காளிகளாக கைகோர்த்து எம்மோடு பயணிக்க வேண்டுமென உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!