முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது சிறிலங்காவின் யுத்த விமானங்கள் மேற்கொண்ட கோரக் குண்டுத் தாக்குதலில் சிதறி வீழ்ந்த செஞ்சோலை மொட்டுகளின் 9ஆம் ஆண்டு நினைவு வணக்க நாளும் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது என தமிழகத்தில் தனக்குத்தானே தீ மூட்டி ஆகுதியாகிய தோழர் செங்கொடியின் 4 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்சு தமிழ்பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் 15.08.2015 சனிக்கிழமை TROCADERO பகுதியில் இடம்பெற்றது.
பிற்பகல் 15.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் ஈகச்சுடரினை 16.07.2001 அன்று மணலாறுப் பகுதியில் இடம்பெற்ற நேரடிமோதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் சாந்தன் அவர்களின் உறவினர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.
தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரமுகர்களின் நினைவு உரைகள், பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பின் சார்பில் கவிதைகள், பிரான்சு மூதாளர் இல்லத்தின் சார்பில் கவிதை, செவ்ரோன் தமிழ்ச்சோலை மாணவியின் நடனம் என்பன இடம்பெற்றது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நினைவுரைகளை அக்கினிக் கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன், தமிழீழ மக்கள் பேரவை உறுப்பினர் திரு.போல், எமது போராட்ட ஆதரவாளர் கறுப்பினப் பெண்மணி Gazziella, பிரான்சு மூதாளர் அவையைச் சார்ந்த திரு. கிருபை நடராசா, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முக்கிய உறுப்பினர் திரு.சத்தியதாசன் ஆகியோர் செஞ்சோலை படுகொலை தொடர்பாகவும் செங்கொடி நினைவாகவும் ஆற்றியிருந்தனர்.
Gazziella தனது உரையில், தமிழ் மக்களின் போராட்டம் பற்றித் தான் அண்மையிலேயே அறிந்ததாகவும் அதன்பின்னர் தமிழ் மக்களுக்கு தான் ஆதரவு தெரிவிக்க விரும்பியதாகவும் தெரிவித்த அவர், தமிழ் மக்களின் பிரச்சினைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பிரான்சில் வீடுவீடாகச் சென்று, வீடுகளுக்கு முன்பாக உள்ள தபால் பெட்டிகளில் இடப்போவதாகவும் தெரிவித்தார். இது அனைவருக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியது.
அவர் தற்போது தமிழ் மக்கள் தொடர்பான முகநூல் ஒன்றை உருவாக்கி (Les Enfants du Tamoul) பிரெஞ்சு மொழியில் தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் நிகழ்வுகளை பதிவுசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செயற்பாட்டாளர்களால் பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழி துண்டுப் பிரசுரங்களும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டன.
ஜெனிவா உள்ளிட்ட பல பகுதிகளிலும் தமிழினப் படுகொலை புகைப்படக் கண்காட்சிகளை நடாத்திவரும் செயற்பாட்டாளர் கஜன் அவர்களும் இந்நிகழ்வில் செஞ்சோலைப் படுகொலைப் புகைப்படங்களை காட்சிப்படுத்தியிருந்தார்.
பல வெளிநாட்டவர்களும் எமது போராட்டத்தின் காரணத்தைக் கண்டு வியந்து நின்றனர்.
வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் நாள் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் கலந்துகொள்வதற்கு வழமைபோன்று விசேட தொடருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கலந்துகொள்ள நாம் அனைவரும் தயாராகவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மாலை 5.30 மணியளவில், நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்ததைத்தொடர்ந்து, தமிழ் மக்களுடன் வெளிநாட்டவர்களும் கைகளைத் தட்டிநின்றதைக் காணமுடிந்தது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.