முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது சிறிலங்காவின் யுத்த விமானங்கள் மேற்கொண்ட கோரக் குண்டுத் தாக்குதலில் சிதறி வீழ்ந்த மொட்டுகளின் 9ஆம் ஆண்டு நினைவு வணக்க நாளும்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது என காஞ்சிபுரத்தில் தனக்குத்தானே தீ மூட்டி ஆகுதியாகிய தோழர் செங்கொடியின் நினைவு வணக்க நாளும் புலம்பெயர் நாடுகள் எங்கும் இம்மாதத்தில் நினைவுகொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில் பிரான்சிலும் தமிழ்பெண்கள் அமைப்பினால் மேற்படி நிகழ்வுகள் ஆகஸ்ட் 15 ஆம் நாள் ரொக்கத்தோ பகுதியில் நடாத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டியது அவசியம்.
வள்ளிபுனம் பகுதியில் இடம்பெற்ற மேற்படி இனப்படுகொலை உட்பட இதுவரை சிறிலங்கா இனவாத அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு இதுவரை எந்தவித நீதியும் எட்டப்படவில்லை. இந்நிலையிலேயே நாம் எமது நியாயப்பாட்டை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தவேண்டிய தருணம் இது.
இந்நிலையில் வரும் வாரம் நடைபெற இருக்கும் சிறிலங்கா பாராளுமன்றத் தேர்தல் என்றுமில்லாதவாறு நெருக்கடி மிக்க தேர்தலாக உள்ளது. பல கட்சிகளின் வேட்பாளர்கள் வடக்கு கிழக்கில் தேர்தலுக்காக போட்டியிடுகின்றார்கள். தமிழரின் பலத்தை உடைத்து அவர்களை பலவீன படுத்துவதே இந்த சக்திகளின் நோக்கமாகும். அதை முறியடித்து தமிழரின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவதே தமிழ் மக்களின் முக்கிய கடமையாகும். எந்தச் சந்தர்ப்பத்திலும் வாக்களிப்பதை தவற விடாது பயன்படுத்துவதுடன் கடந்த காலங்களில் தேர்தலில் வெளிப்படுத்தியதைவிட அதிக அக்கறை காட்ட வேண்டும்.
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை உலகத்திற்கு வெளிப்படுத்தி தேசத்தின் மீது பற்றுறுதி கொண்டவர்களையும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியையும் தேர்ந்தெடுப்பது இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் தவிர்க்க முடியாத அரசியல் தேவை ஆகும்.
தமிழ் மக்களின் தேசியத்திற்காகவும் ஐக்கியத்திற்காகவும் உழைக்கும் தலைமைகளை பாரளுமன்றம் அனுப்பவேண்டும். அவர்களை பலப்படுத்துவதும் தமிழர்களின் முக்கிய கடமையாகும்.
சொந்த நாட்டிலே வாழும் உரிமையும் இழந்து சுய கௌரவமற்ற இரண்டாம் தர பிரஜைகளாக்கப்பட்ட தமிழர்கள், தமது வாக்குரிமையை புத்திசாதுரியமாகப் பயன்படுத்துவதன் மூலமே நிம்மதியான, கௌரவமான வாழ்வை எதிர்காலத்தில் எட்டமுடியும். கடந்த அறுபதுவருட அரசியல் அனுபவத்திற்குள்ளான தமிழ் மக்கள், சரியான தெரிவை மேற்கொள்வார்கள் என புலம் பெயர் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் நாள் தமிழின படுகொலைக்கான நீதி கேட்டு ஜெனிவாவில் நடைபெறும் பேரணியில் ஐரோப்பா மற்றும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு தமிழரின் உரிமையை உலகிற்கு எடுத்துரைப்போம்.
பிரான்சு நாட்டில் வழமைபோன்று ஜெனிவா பயணத்திற்கான தொடருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பயணச்சீட்டுகளும் வழங்கப்படுகின்றன.
வரும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் ரொக்கத்தோ பகுதியில் இடம்பெறும் நிகழ்வில் தோழர் செங்கொடியை நினைவிற் கொள்வதுடன், வள்ளிபுனப் படுகொலைக்கும் நீதிகேட்போம் வாரீர்.
காலம் : 15ஃ08ஃ2015
நடைபெறும் இடம் : Place du Trocadéro Métro : 6 & 9 Trocadéro
நேரம் : 03.00 மணி