ஒரு நாள் அதிகாலை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்றுகையிடுகிறது. 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியபோது காயமடைந்த விடுதலைப் புலிகளுக்கு அந்த வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத்தொடர்ந்து இராணுவத்தினரால் அந்த வீடு முற்றுகையிடப்படுகிறது.
அவ்வேளையில் அங்கிருந்த ஓர் இளைஞன் முற்றுகையிட்டவர்களை நோக்கி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டவாறே வீட்டுமதிலைத் தாண்டிக் குதித்து ஓடுகிறான். அவனை நோக்கிச் சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்படுகின்றன. அப்போது அந்த இளைஞனின் வயிற்றில் ஒரு குண்டு பாய்கிறது.
படுகாயமுற்ற நிலையிலுங்கூட அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டு விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு இரண்டு மைல்தூரம் இடைவிடாமல் ஓடி தன் இயக்கத் தோழர்களின் இருப்பிடத்தை அடைகிறான். தோழர்களிடம் தன் கைத் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு கீழே விழுந்து மூர்ச்சையாகிறான். வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறிமையினால் இரும்பையொத்த அவனது கட்டுடல் சோர்வடைகிறது.
விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகையால் அப்போது அங்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தப்படவில்லை. அவசர அவசரமாக முதலுதவிகள் செய்யப்பட்ட நிலையில் அவனை தோழர்கள் விசைப்படகுமூலம் கடல் மார்க்கமாகத் தமிழகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கை, முற்றுகை இவற்றைத்தாண்டி தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது. தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டு பேசும்வரை அவன் நினைவு தப்பவில்லை. இருந்தபோதிலும் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் நிலை மோசமடைந்தது. அவனைப் பிழைக்கவைக்க அவனது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க (27-11-1982 அன்று மாலை 6.05 மணிக்கு) அந்த இளைஞன் இயக்கத்தில் முதற்களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொள்கிறான். (இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூரப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.)
அவன்தான் வடமராட்சி கம்பர் மலையைப் பிறப்பிடமாக கொண்ட லெப்டினன்ட் சங்கர். சிங்கள இராணுவப்படையினர் வலைவிரித்துத் தேடிவந்த செ. சத்தியநாதன். சங்கர் அச்சம் என்றால் என்னவென்று அறியாத அடலேறு. இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லா வீரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன்..
ஒரு சின்னப்பிசகு என்றாலும் கையோடு வெடித்து ஆளையே முடித்துவிடக்கூடிய வெடிகுண்டுகளின் தயாரிப்புகளிலும் அச்சமில்லாது ஈடுபடுவான். அரசபடைகளின் தீவிரக் கண்காணிப்புக்கு அவன் இலக்காகியிருந்தாலும் அச்சம் எதுவுமின்றி கிராமங்களில், வீதிகளில் சாதாரணமாக உலவி வருவான். அதே நேரத்தில் சுழன்றுகொண்டிருக்கும் அவன் விழிகள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளை நுணுக்கமாக அவதானித்தபடியே இருக்கும். தான் அறியாது செய்யும் சின்னத் தவறும்கூட ஒரு கெரில்லா வீரன் என்ற முறையில் தனக்கும் இயக்கத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் சங்கர் எப்போதும் விழிப்பாயிருப்பான். அரச படைகளின் கைகளில் சிக்க நேருமானால் எதிரிகளில் ஒருவனையாவது வீழ்த்திவிட்டுத் தானும் சாவது என்பதில் அவன் அசைந்தது கிடையாது. விடுதலைப்போராளிகள் எனப்படுபவர்கள், ஆயுதங்களோடு பிடிபடும் செய்திகளைப் பத்திரிக்கையில் வாசிக்கையில் குமுறுவான். அமைதியான தன்மையும், அதிகம் பேசாத சுபாவமும் கொண்ட சங்கரின் இந்தக் குமுறலுக்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு, அரச படைகளின் கையில் எதிர்ப்பு எதுவுமில்லாமல் ஒரு விடுதலைப்போராளி சரணடைவது என்பது கோழைத்தனமானது என்பது சங்கரின் உறுதியான முடிவாக இருந்தது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் விடுதலைப்போராளிகளை ஆயுதங்களோடு அரச படைகள் கைது செய்வதை அனுமதிக்கும் போக்கானது, அரச படைகளுக்கு விடுதலைப் போராட்டத்தை முறியடித்துவிடுவதில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களின் துணிச்சலைக் கூட்டிவிடும் என்று சங்கர் கருதினான்.
இருபத்தொரு வயதில் அவன் சாதித்தவை தமிழீழப் போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமானவை. இனிமேல் சாரணர்களை அனுப்பி வடக்கில் புலிப்படையை அடக்கிவிட முடியும் என்று பாசிச சர்வாதிகாரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிறீலங்காத் தலைநகரில் பிரகடனம் செய்தபோது, நெல்லியடியில் அரச படைகள் மீது சங்கர் நடத்திய கெரில்லாத் தாக்குதல் தமிழீழம் காணும்வரை தமிழீழப் போராட்டம் ஓயாது, ஓயாது என்பதை அரசுக்கு எடுத்துக்காட்டியது. ஜீப் சாரதியின் மீது வெற்றிகரமான முதல் தாக்குதலை நடத்தி, ஜீப் வண்டியை நிறுத்த வைத்து, கதவைத்திறந்து சாரதியை ஒரு கையில் வெளியே இழுத்து எறிந்தவாறு, மறு எதிரியை நோக்கிக் குண்டுகளைத் தீர்த்த லாவகம் சங்கருக்கே உரியது. இடுப்பிலிருந்து ரிவால்வரை எடுத்த மாத்திரத்தில் குறிவைக்கும் அவனது சாதுரியம் அலாதியானது. நெல்லியடியில் அரச படையினர் பீதியுற்ற நிலையில், சங்கர் கால்களை அகலவிரித்து பக்கவாட்டில் நின்று அரச படையினர் மீது குண்டுமாரி பொழிந்த காட்சி இப்போதும் நம் கண்களில் நிழலாடுகிறது.
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின்மீது சீலனின் தலைமையில் நடைபெற்ற கெரில்லாத்தாக்குதலின் வெற்றிக்கு சங்கரின் பங்கும் கணிசமானதாகும். அரசாங்கத்தால் பொலிஸ் நிலையங்கள் உஸார்ப்படுத்தப்பட்டிருந்தநிலையில், மாடிக்கட்டிடத்தோடு, பிரதான வீதியிலிருந்து சற்றுத்தள்ளி உள்ளே அமைந்திருந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் மீது முன்பக்க வாயிலூடாகத் தாக்குதல் நடத்துவது என்பது விஸப்பரீட்சைதான். ஆனால் உயிரைக் கடந்த காலத்திற்கு எழுதி வைத்துவிட்டு, புரட்சி வேள்வியில் குதித்திருக்கும் சங்கர், சீலன் போன்ற போராளிகளின் முன்னே அபாயங்களும், தடைகளும் என்ன செய்துவிடமுடியும்? ஜி.3 சகிதம் படுத்துக்கிடந்த சங்கர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தாக்குதலில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக இருந்து நடத்திய தாக்குதல் இப்பகுதி அரச படைகளை ஸ்தம்பிக்கச் செய்தது..
பொன்னாலைக் குண்டு வெடிப்பு நடவடிக்கையிலும் சங்கர் கடுமையாக உழைத்தவன். ஐக்கிய தேசியக்கட்சி (ஜெயவர்த்தனா கட்சி) உறுப்பினர் புன்னாலைக்கட்டுவன் தம்பாபிள்ளை மீதான இயக்க நடவடிக்கைக்குச் சங்கரே பொறுப்பு வகித்தான்.
எந்தவிதமான வாகனத்தையும் நேர்த்தியாகச் செலுத்தும் ஆற்றலும் சங்கரின் பன்முனைப்பட்ட ஆற்றலுக்குச் சான்றாகும். ஒரு கெரில்லா தாக்குதலையடுத்து ஏற்படுகிற பரபரப்பு, எதிரிப்படைகள் அந்த இடத்திற்கு வருமுன்னர் வெளியேற வேண்டிய பதைப்பு என்பவற்றிற்கும் மத்தியில் மிகுந்த வேகத்துடன் அதிக நிதானத்துடனும் வாகனத்தைச் செலுத்துவதில் சங்கர் வல்லவன்.
சக போராளிகளுக்கு ஆயுதங்களைப் பயிற்றுவிக்கும்போது மிகுந்த கவனம் செலுத்துவான். தெளிவாக விளக்குவான். தனக்குத் தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவன். அன்போடும் பணிவோடும் பழகுவதால் சகபோராளிகள் மத்தியில் தனி மதிப்பு வகித்து வந்தான்.
தமிழீழ விடுதலையைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவத் தலைமையிலேதான் வென்றெடுக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த சங்கர் இயக்கத்தில் தன்னையே கரைத்துக் கொண்டவன். விடுதலைப் போராட்டமே சங்கரின் முழுமூச்சாக இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கென்றே ஆயுதமேந்திக் களத்திலே குதித்தவன் இந்த வீரன். சமூக விரோத நடவடிக்கைகளையும் சந்தா ப்பவாதிகளையும் அவன் அறவே வெறுத்தான். அவன் மனது மிகவும் சுத்தமானது. இத்தகைய இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்.
இயக்கத்தலைவர் பிரபாகரனின் அரசியல் வழி காட்டலிலும், இராணுவக் கட்டுக் கோப்பிலும் சங்கர் ஊறி வளர்ந்தவன். பிரபாகரனின் அரசியல் தூய்மையில் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான். மலரப்போகும் தமிழீழம் தன்னலமற்ற-தூய்மைமிக்க விடுதலைப் போராளிகளால்தான் தலைமையேற்று நடத்தப்பட வேண்டும் என்று அவன் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறான். பதவிப் பித்தர்களும் துரோகிகளும் எங்கள் புனித இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க முனைந்த போதெல்லாம் அமைதியான இந்தப் போர் மறவன் சினங்கொண்டு எழுந்திருக்கிறான்.
சாகும்தறுவாயிற்கூட அவன் தன் உற்றார், பெற்றோரை நினைக்கவிலலை. தம்பி தம்பி என்றுதான் அந்த வீரனின் உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தன. தம்பியும், மற்ற இயக்கப்போராளிகளும் கண்கலங்கி நிற்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனான்.
ஒரு உண்மை மனிதனின் கதை என்ற ரஸ்ய நாவலைக் கடைசியாக வாசித்துக்கொண்டிருந்த சங்கர் அந்த நாவலை முழுதும் வாசித்து முடிக்கவில்லை. சங்கர் என்ற உண்மை மனிதனின் கதையே ஒரு வீர காவியம்தான்.
“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”