மண்ணுக்குள் வித்தாகியிருக்கும் எமது மாவீரர்களை கண்டு சிங்கள பௌத்தம் இன்றும் பயங்கொள்கிறது என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் நேற்று 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல் நிகழ்வில் ஆற்றிய சிறப்பு உரையில் தெரிவித்திருந்தார்.
அவர் ஆற்றிய சிறப்புரையின் முழு வடிவம் வருமாறு:-
எமது மாவீரர்களின் பெற்றோர், சகோதரர்களுக்கு வணக்கம்!
கடல், வான்,தரை காற்றுடன் கலந்து வெற்றிகள் பல தந்து இந்த தமிழ் இனத்தை உலகில் உயரச்செய்த உன்னத மாவீரர்களை பெற்றெடுத்தவர்கள், உடன் பிறந்து வளர்ந்தோர் உங்களுடன் சில மணித்துளிகள் இருப்பதால் பெருமையடைகின்றோம்.
கொல்லைப்புறம் தனியாகப் போகவும் உதவிகேட்டநாம், மரநிழலினைக்கண்டு சப்தநாடிகளும் ஒடுங்கிப்போன நாம் இந்த விடுதலைப்போராட்டத்தின் பின் வீரத்திலும், விவேகத்திலும் ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியல் எதையும் சாதிக்கும் வல்லமையை தந்தவர்கள் உங்கள் பிள்ளைகள்,சகோதரர்கள்.
உங்கள் வயிற்றில் பிறந்து, மற்றப்பிள்ளைகளுடன் வளர்ந்து, இன்று உலகத் தமிழினம் தங்கள் பிள்ளைகளான, தன்மானத்தின் சிகரமாக எம்மையெல்லாம் தலைநிமிரச்செய்தவர்கள் உங்கள் பிள்ளைகளாவர். அவர்களை இன்று கண்கண்ட தெய்வங்களாக நாம் கைதொழ ஒரு பேறை எமக்கு தந்தவர்கள் நீங்களாவீீீர்.
இன்று நீங்கள் தான் எமது பெரும் பலம்.எமது பெரும் சக்தியாகும் எம்மை பயபக்தியுடன் வழிநடத்திச்செல்லும் வரலாறாகும். உங்கள் வாழ்த்தும் ஆசியும் உங்கள் பிள்ளைகள் ஈகம் பலநூற்றாண்டு எம்மை வழிநடத்திச் செல்லும்.
மண்ணுக்குள் வித்தாகியிருக்கும் எமது மாவீரர்களை கண்டு சிங்கள பௌத்தம் இன்று வரை பயங்கொண்டுதான் நிற்கின்றது.
அதனால்தான் அதிகமாகிச்சென்று கொண்டிருக்கும் வீரியத்தை இல்லாதழிக்கவும், எமது அடுத்த தலைமுறைக்கு வீரியமாக எடுத்துப்போகக்கூடாது என்று சிங்கள பௌத்தம் கட்சிதமாக எம்மவர்களை காய் நகர்த்தி
தாய் மண்ணில், புலத்தில், தமிழகத்தில் தனது பரப்புரைகளை செய்கிறது.
போராளிகள் மட்டத்தில், அரசியல் ரீதியாக கலைரீதியாக, விளையாட்டு ரீதியாக, தமிழ்க்கல்வி ரீதியாக, மனிதநேயச்செயற்பாட்டு ரீதியாக இன்று ஆன்மீக ரீதியாகவும் செய்கிறது.
இம்மாதம் 20 ஆம் திகதி இறந்தவர்களின் நாளாக வடக்கு, கிழக்கு கத்தோலிக்க மதபீடம் தமிழ் ஆயர்கள் கொண்டுவந்த தீர்மானம் என்ன?
1.நாட்டின் விடுதலைக்கு போராடி தம்மை உயிரை ஈந்தவர்கள் மாவீரர்கள், படைவீரர்கள் காவல்வீரர்கள் ஒரு தேசியத்தின் உயர்மதிப்புக்குரியவர்கள். இறந்தவர்கள் என்ற பொதுவார்த்தைப் பிரயோகத்தை சொல்லி விடுதலைக்காகவும், இயற்கையின் அனர்த்தத்திலும், சாதாரணமாகச் செத்தவர்கள் என்ற பதத்திற்கு கொண்டுவரும் செயற்பாட்டை யார் இவர்களுக்கு கொடுத்தார்கள்? இந்த வணபிதாக்களுக்கு பிள்ளைகள் சகோதரர்கள் யாரும் போராடி உயிர் நீத்தார்களா? இதை முடிவுசெய்ய இவர்கள் யார்? இதனை மாவீரரை பெற்றவர்கள் சகோதரர்கள் எவர் ஏற்றுக் கொண்டார்கள்.
2. கலை ரீதியாக எங்கள் சகோதரிகள் பலரை சின்னாபின்னமாக்கி வன்மம் புரிந்த இராணுவத்தளபதி பிரசன்னா டி சில்வாவின் மகள் ஜெகானி பாடிய பாடலைவிட எங்களின் இரண்டரை வயதுக் குழந்தை அழகாகப் பாடியது,
3.அரசியல் ரீதியாக 1956 பண்டார நாயக்கா ஒரேமொழி பிறகு இப்ப கோட்டபாயா ஓரேசட்டம்.
4.விளையாட்டு – சிங்களக் கொடியை பிஞ்சுகள் கைகளில் பெரியவர்கள் கொடுத்துவிடுவது முரண்பாட்டை ஏற்படுத்துவது.
5.கட்டமைப்பு ரீதியாக பார்த்தால் எமது நெஞ்சிலும், கைகளிலும் வைத்து தாங்கிக் கொண்டிருக்கும் மாவீரர்கள் சகோதரர்கள், மாவீரர்களின் சகோதரர்களால் அவமானப்படுத்துவதும். அசிங்கமான வார்த்தைகள் பொதுவெளியில் எல்லோரையும் விமர்சனம் செய்வது பெரும் வேதனையை யாருக்குத் தருகிறது. பிள்ளைகளையும், சகோதரர்களை மண்ணுக்குக் கொடுத்து விட்டு நிற்கும் இவர்களை எதிரியைத் தவிர வேறு யார் செய்வார்கள்.
கைமுனுவின் தாயார் விகாரமாதேவி சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது. காலை மடித்து படுத்திருந்தபோது காலை நீட்டி படு கைமுனு என்றபோது ஒருபக்கம் மாகாவலி கங்கையும் தமிழர்களும், மற்றப்பக்கம் வங்க சமுத்திரம் அங்கும் தமிழர் தான் காலை எப்படி நீட்டி படுப்பது என்றானா? சிங்களத்தில் துட்ட தமிழில் துட்டர் என்றால் கூடாதவர்கள் என்பதே அவன் செய்த பல கூடாதசெயல்களே துட்டகைமுனு என்ற பெயர் அவனுக்கு சூட்டப்படது.
ஏன் இதனை இப்போது சொல்கின்றேன் என்றால் நாமும் நிம்மதியாக எந்தபக்கமும் காலையோ கையையோ நீட்டிப்படுக்க முடியாதநிலை. அது வேறுயாராலும் இல்லை. எம்மோடு இருந்தவர்கள், எம்மோடு பயணித்தவர்கள், விடுதலை என்ற தேரை வடம்பிடித்தவர்கள் இதைச்செய்வதுதான் தாங்க முடியாதுள்ளது.
எனவே அன்பான பெற்றோர்களே! சகோதரர்களே எம் குழந்தைகள் உன்னத தியாகம் அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்றும் வகையில் எம்மோடு நீங்கள் தொடர்ந்து எமக்கு பேருதவியாக பலமாக, தடம்பிறளாது நேர்த்தியாக பயணிக்க நீங்கள் எந்தக் குழப்பத்துக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும் இதையே எங்கள் மாவீரர்களின் திருவுருப்படத்தின் முன் உரிமையோடு கேட்டுக்கொள்வதுடன்,
மாவீரர்நாளுக்கு வரும் போது 12 மணிக்கு தேசியக்கொடியேறும்போது வரும்படியும், உங்களுக்க தடுப்பூசி ஏற்றிய , பரிசோதனைத் துண்டு, மற்றும் மாவீரர் குடும்ப அடையாளப் படுத்தலுடன் வருகை தரும் படியும் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.