தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று வவுனியாவில் நேற்று (10) நடைபெற்றது.
இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியற்குழுத் தலைவர், இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் நீதியாகவும் பக்குவமாகவும் நடந்துகொள்கின்றனர் எனவும் அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு இடம்கொடுத்து அவற்றை நிறைவேற்றுவது தமது கடமை எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மை அறியப்பட்டு தேசியப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் இதன்போது வலியுறுத்தினார்.
மேலும், அரசியல் தீர்வு ஏற்படாவிட்டால் தமிழ் தேசிய இனம் அழிவதற்கு வாய்ப்புண்டு எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சுரேஷ் பிரேமசந்திரன் இந்த நிகழ்வில் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவம் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
வடக்கு மாகாணத்தில் ஒன்றரை இலட்சம் இராணுவமும் கிழக்கு மாகாணத்தில் 20 ஆயிரம் இராணுவமும் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் வடகிழக்கிலும் நிலைகொண்டுள்ளதாகவும் அதற்கு மாறாக ஏனைய மாவட்டங்களில் 30 ஆயிரம் இராணுவம் மாத்திரமே உள்ளதாகவும் சுரேஷ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்ற விடயத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர வேறு எவரும் பேச முடியுமா என்ற கேள்வியையும் இந்நிகழ்வில் அவர் முன்வைத்தார்.