இரவு நித்திரைக்குச் சென்ற 17 வயது மாணவன் ஒருவர் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் கிழக்கு, சுழிபுரத்தில் நடந்துள்ளது.மாணவனின் உயிரிழப்புக்கு நஞ்சருந்தியமையே காரணம் என்பது உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்று வட்டுக்கோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் 2023 ஆம் ஆண்டு உயர்தர மாணவனான மஹிந்தன் (வயது-17) என்பவரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
மாணவனும், வீட்டிலிருந்தவர்களும் நித்திரைக்குச் சென்றுள்ளனர். அதிகாலை 3 மணியளவில் நிலம் ஈரமாகியுள்ளதை உணர்ந்து சகோதரி எழுந்து பார்த்துள்ளார்.மாணவன் சிறுநீர் கழித்த நிலையில் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பதை அவதானித்து ஏனையோருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் மாணவன் சங்கானை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவருக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டபோதும் மாணவன் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்துள்ளார்.