பிரான்சில் 30 வயதுக்குக் குறைந்தோர் மொடர்னா தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்க்குமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அந்த வயதுப் பிரிவினர் பைசர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அது பரிந்துரைத்துள்ளது. மொடர்னா தடுப்பூசி போட்டுக்கொண்டால், இதய வீக்கம் ஏற்படும் அபாயம் அதிகம் என்று பிரான்ஸ் கூறுகிறது. பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு வாரத்தில் இதய வீக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்தது.
ஆயினும் மொடர்னா தடுப்பூசியுடன் ஒப்புநோக்க, பைசர் தடுப்பூசியால் ஏற்படக்கூடிய அபாயம் 5 மடங்கு குறைவு என ஆய்வு குறிப்பிட்டுள்ளது. பிரான்ஸில் கடந்த மே மாதம் முதல் ஓகஸ்ட் வரை, அத்தகைய பக்கவிளைவுகளுக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 12 இலிருந்து 50 வயது வரையிலான அனைவரின் உடல்நிலையையும் ஆய்வு கண்டறிந்தது.
என்றாலும், அந்த இரண்டு தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகளை விடப் பலன்கள் அதிகம் என்று ஐரோப்பிய ஒன்றிய மருந்து நிர்வாக அமைப்பு தெரிவித்தது.
30 வயதுக்கு மேற்பட்டோர் மொடர்னா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்றும் பிரான்ஸ் பரிந்துரைத்துள்ளது.