ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் சக்திவாய்ந்த குண்டொன்று வெடித்துள்ளது.
காபூல் விமான நிலையத்தின் நுழைவாயிலில் உள்ள முதல் சோதனை சாவடியில் குண்டு வெடித்துள்ளது. விமான நிலையத்திற்குள் செல்லும் பயணிகள் முழுமையாக சோதனை செய்யப்படும் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
வெடிப்புச் சம்பவத்தில் ஏற்பட்ட சேதம் குறித்தான முழுத் தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. பொதுமக்கள் காயம் அடைந்து உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெடிகுண்டு சம்பவத்தையடுத்து உடல்கள் அங்கு சிதறி கிடக்கிறது என்றும் அம்புலன்ஸ்கள் விரைந்து உள்ளன என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
வெடிகுண்டுகள் நிரம்பிய காரை ஏற்றிக் கொண்டுவந்த தீவிரவாதி அதனை மோதி வெடிக்க செய்து உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளன.
காபூல் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட இத்தக்குதலுக்கு எந்தஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.
இருப்பினும் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று இராணுவ மையம் மற்றும் பொலிஸ் அகடமி மற்றும் அமெரிக்க சிறப்புப் படை மையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 51 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.