கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயிருந்த தனது மகளை நீதிமன்றத்தில் கொண்டு வந்து காட்டுமாறு கோரி, தாயார் ஒருவர் யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணைகளின்போது, காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த 17 வருடம் 2 மாதம் வயதுடைய பெண் கழுத்தில் தாலியுடனும் 6 மாதக் கர்ப்பத்துடனும் தனது காதலனுடன் நீதிமன்றத்தில் பலரும் பார்த்திருக்க வந்து நின்றார். இந்த வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் அளித்துள்ள தீர்ப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் திருமண வயதை எட்டாத சிறுமியொருவர் இவ்வாறு தாலியோடும் கர்ப்பமாகவும் வந்து நின்ற கோலத்தையடுத்து, பெருமைக்குரிய யாழ் மண்ணின் பெருமை சீரழியும் அவல நிலைக்கு ஆளாகியிருக்கின்றது என கவலை வெளியிட்டிருந்தார் . தமிழ் மக்களின் கலாசாரத் தலைநகரமாகக் கருதப்படுகின்ற யாழ் மண்ணின் பெருமை சீரழியும் நிலையை வெளிப்படுத்தும் வகையில் இந்த வழக்கு தொடர்பான செய்தி முன்னர் வெளியாகியிருந்தது. அந்தச் செய்தி சமூகத்தின் பல தரப்பினர் மத்தியிலும் பல்வேறு உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. வயது வந்த பெண்களின் தாய்மார், வயது வந்த இளம் பெண்கள், பொறுப்புள்ள பெற்றோர் என பலதரப்பட்டவர்களும் இந்த வழக்கு தொடர்பான சம்பவம் குறித்து பெரிதும் கவலையடைந்திருந்தனர்.
அதேநேரம், 17 வருடம் 2 மாதம் நிறைந்த – திருமண வயதை எட்டாத அந்தப் பெண்ணை அவருடைய விருப்பப்படி, அவருடைய காதலனுடன் (தாலி கட்டிய கணவன்) செல்ல அனுமதித்தன் மூலம் 18 வயதுக்குக் குறைந்தவர்களின் தாலி திருமணம் செல்லுபடியானதா என்ற ஒரு மயக்க நிலையை ஏற்படுத்தியிருந்தது. இதனை சமூகத்திற்குத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த வழக்கு விசாரணையின்போது எழுந்திருந்த சட்டரீதியான விவாதம், கேள்விகள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டிண தேவை எழுந்துள்ளது . இந்த வழக்கு விசாரணையின் போது சட்டரீதியான பல்வேறு விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டிந்தன என்பது குறிப்பிடத்தக்கது, அத்தகைய கவனிப்பின் அடிப்படையிலேயே நீதிபதி இளஞ்செழியன் 18 வயதுக்குக் குறைந்த தாலித் திருமணம் செல்லுபடியற்றது. அதனை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட நீதிமன்றத்திற்கே உள்ளது என தெரிவித்தார். அரசமைப்புச் சட்டத்தின் 141 ஆம் பிரிவின் கீழ் இந்த ஆட்கொணர்வு மனுவை காணாமல் போயிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த பெண்ணின் தாயார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணையின்போது, அந்தப் பெண் தனது காதலுடன் சட்டத்தரணியின் ஊடாக மன்றில் முன்னிலையானார்.
அப்போது அவருடைய சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, இந்தப் பெண்ணுக்கு 17 வருடம் 2 மாத வயதாகின்றது. இவர் இந்து சமயாசாரப்படி, தாலித்திருமணம் செய்துள்ளார்.ஆறு மாதக் கர்ப்பிணியாகவும் உள்ளார் என தெரிவித்தார். இதனையடுத்து, 18 வயதுக்குக் குறைந்த தாலித் திருமணம் சட்டப்படி செல்லுபடியானதா என்ற சட்ட விவாதம் மன்றில் எழுந்தது. அப்போது, பொதுத் திருமணக் கட்டளைச் சட்டத்தின்படி 18 வயதுக்குக் குறைந்த பதிவுத் திருணம் செல்லுபடியற்றது. குணரட்னம் எதிர் பதிவாளர் நாயகம் வழக்கில் நீதியரசர் ஷிராணி திலகவர்தன 18 வயதுக்குக் குறைந்த பதிவு திருமணம் செல்லுபடியற்றது என தீர்ப்பளித்துள்ளார். எனவே, எந்தவிதமான திருமணமும் 18 வயதுக்குக்குறைந்ததாக இருந்தால் தேச வழமைச் சட்டம், பொதுத் திருமணக் கட்டளைச்சட்டம் என்பவற்றின் அடிப்படையில் அது செல்லுபடியற்றது.
எனவே, இந்த வழக்கில் 17 வருடம் 2 மாதம் வயதுடைய பெண் செய்துள்ள தாலித் திருமணம் சட்டப்படி செல்லுபடியற்றது. இதனை ரத்து செய்யும் அதிகாரம் சிவில் நீதிமன்றமாகிய மாவட்ட நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு, எனவே இந்த தாலித் திருமணத்தை ரத்து செய்ய வேண்டுமானால் மாவட்ட நீதிமன்றத்திற்கே செல்ல வேண்டும் என்று நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்தார். அத்துடன் அவர் தனது தீர்ப்பில் மேலும் தெரிவித்ததாவது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 18 வயது ஆகவில்லை எனவே, 17 வயதுடைய இந்தச் சிறுமியின் பாதுகாவலர் யார் என்ற சட்டரீதியான கேள்வியும் எழுகின்றது. இதனையடுத்து, ஐநா சிறுவர் உரிமைகள் சட்டத்தின்படி, 18 வயதுக்குக் குறைந்தவர்கள் சிறுவர் சிறுமியராவர். இலங்கை சிறுவர் பாதுகாப்பு உரிமைகள் சட்டத்திலும், 18 வயதுக்குக் குறைந்தவர்கள், சிறுவர் சிறுமியர் என்றே வரையறுக்கப்பட்டிருக்கின்றது. எனவே அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை பெற்றோராகிய தாய் தந்தையருக்கே வழங்கப்பட வேண்டும் என்பது சட்டம்.
அந்த வகையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 17 வருடம் 2 மாதம் நிறைந்த பெண்ணின் பாதுகாப்பை மனுதாரராகிய தாயிடமே வழங்க வேண்டும். ஆனால் இங்கே அவர் கர்ப்பிணியாக இருப்பதே முக்கியமான பிரச்சினையாகும். அத்துடன், 16 வயதுக்குக் குறைந்த பெண் விரும்பியோ விரும்பாமலோ ஓர் ஆணுடன் உடலுறவு கொண்டால,; அந்த ஆண் மகன் மீது சட்டப்படி பாலியல் வல்லுறவு குற்றம் சுமத்தி, வழக்கு தாக்கல் செய்ய முடியும் என இலங்கை தண்டனைச் சட்டக் கோவை பரிந்துரைக்கின்றது. ஆனால் 16 க்கும் 18 இற்கும் இடைப்பட்ட வயதுடைய பெண் ஒருவர், விரும்பி ஆண் ஒருவருடன், உடலுறவில் ஈடுபட்டால், அந்த ஆண் மகனுக்கு எதிராகக் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
எங்கள் முன்னிலையில் உள்ள இந்த வழக்கில் அப்பெண் கர்ப்பம் தரித்த வயது 17 வருடம் 2 மாதமாகும். எனவே அது குற்றச் செயலும் அல்ல. அடுத்ததாக, 18 வயதுக்குக் குறைந்த சட்டரீதியற்ற தாலித்திருமணத்தின் போது பிறக்கும் குழந்தையின் சட்டபூர்வ நெறிமுறையான அந்தஸ்து என்ன என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது. அதனை சட்டபூர்வமாக்க வேண்டுமானால், குழந்தையை சுமக்கும் பெண் 18 வயது நிரம்புகின்றபோது, பொதுத் திருமண கட்டளைச் சட்டத்தின் கீழ், சட்டரீதியான பதிவுத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். எனவே, 18 வயதுக்குக் குறைந்த தாலி திருமணத்தை ரத்து செய்வது, பிறக்கப்போகும் குழந்தையின் நெறிமுறையான, சட்டரீதியான தன்மை, 18 வயதுக்குப் பின்னர் செய்யப்பட வேண்டிய பதிவுத் திருமணம் என்பன சிவில் நீதிமன்றமாகிய மாவட்ட நீதிமன்றத்திலேயே தீர்க்கப்பட வேண்டும் .
மேல் நீதிமன்றத்தில் எங்கள் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பிள்ளையைக் காணவில்லை என்ற ஆட்கெணர்வு மனு வழக்காகும். வழக்கு விசாரணைகளின்போது, பிள்ளையை உயிருடன் மன்றில் நிறுத்தியுள்ளார்கள். பிள்ளை 17 வருடம் 2 மாதம் என்ற காரணத்தினால், அந்தப் பிள்ளையின் தாலித் திருமணம் சட்டரீதியானதல்ல. இந்தப் பெண், கர்ப்பமாக இல்லாதிருந்தால், சிறுமி என்ற அடிப்படையில் அவருடைய பாதுகாப்புக்கான பொறுப்பை, நீதிமன்றம் அவருடைய தயாரிடமே வழங்கியிருக்கும். . ஆனால் அப்பெண் கர்ப்பிணியாக இருப்பதனால் நாளை பிறக்கப்போகும் குழந்தைக்குத் தந்தை, யார் என்ற கேள்வி எழுப்பப்படும்.
எனவே, ஆட்கொணர்வு மனுவின் விதிவிலக்கான காரணங்களின் அடிப்படையில் அந்தப் பெண் காதலனுடனேயே செல்ல விரும்புவதனால் (தாலிகட்டிய இளைஞன்) அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. திருமணம் சம்பந்தமாகவோ பெண்ணின் பாதுகாப்பு சம்பந்தமாகவோ பிறக்கப்போகும் குழந்தையின் நிலைமை சம்பந்தமாகவோ, சிவில் நீதிமன்றமாகிய மாவட்ட நீதிமன்றத்திலேயே உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டு இந்த வழக்கை இந்த நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்துவதில் பயனில்லை எனக் கூறி, வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தார்.