
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் கிணற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் வசிக்கும் மாணவன் ஒருவர் தனது நண்பர்களுடன் பாடசாலையில் சிரமதானம் செய்யப்போவதாக வீட்டில் கூறிவிட்டு சுழிபுரம் – திக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலே நீந்துவதற்காக சென்றிருந்தார்.
இந்த நிலையில் அவர் நீந்திக் கொண்டிருக்கும்போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இதனை அவதானித்த அவரது நண்பர்கள் அயலில் உள்ளவர்களை அழைத்து அவரை காப்பாற்றி மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.
மூளாய் வைத்தியசாலையில் இருந்து குறித்த இளைஞனை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்போது வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
குறித்த மாணவனின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மூளாய் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ரஜீவன் என்ற 18 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இம்மாணவன் குறித்து வெளியான முகநூல் பதிவில்

ரஜீவனுக்கு அஞ்சலி!
நீரில் மூழ்கி உயிரிழந்த மூளாயைச் சேர்ந்த மாணவன் பிரபாகரன் ரஜீவன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
துடிப்புள்ள, பல்துறை ஆற்றலுள்ள இளைஞனான இவரின் இழப்பு எமது இனத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
மழை காலத்தில் நீந்தி மகிழ்வது வழமையானது. அது தேவையானதும் கூட. எனினும், இந்த விடயத்தில் அதிக கவனத்துடன் செயற்படவேண்டும். குறிப்பாக நீந்தி விளையாடும் சிறுவர்கள் விடயத்தில் பெற்றோர் அதிக கவனம் எடுக்கவேண்டும்.
தேவையற்ற இழப்புக்களை தவிர்க்க அனைவரும் விழிப்போடு செயற்படுவோம்.