ஐ.நா சபையில் சித்திரவதை சமவாயம் உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையிலும் இலங்கை உட்பட சர்வதேச ரீதியில் சித்திரவதை தொடர்பிலான குற்றங்கள் இன்றும் அதிகரித்துச் செல்கின்றது என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2014 ஆண்டு 66 ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி மாத்திரம் மனித உரிமைகள் குறித்து பேசுவதைவிட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் பேசப்படவேண்டும் என்பதே இந்த ஆண்டுக்கான தொனிப்பொருளாக கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு மனித உரிமைகள் ரீதியில் மிகவும் முக்கியமான ஆண்டாக அமைகின்றது. ஏனெனில் ஐ.நா சபையில் இனப்பாரபட்சத்திற்கு எதிரான சமவாயம் 1965ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 50 வருடங்களை நிறைவு செய்கின்றது. இதனால் முக்கியமான ஆண்டாக கொள்ளப்படுகின்றது. அத்துடன் ஐ.நா சபையில் சித்திரவதைக்கான சமவாயம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்களை எதிர்வரும் ஆண்டு நிறைவு நிறைவு செய்கின்றது.
30 வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும் சித்திரவதைகள் தொடர்பிலான குற்றங்கள் குறைந்துள்ளதா என்று நோக்கினால் இலங்கையிலும் சரி சர்வதேசரீதியிலும் சரி அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதேபோல 1989 ஆண்டு சிறுவர் உரிமை சமவாயம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஆண்டு 25 வருடங்களை நிறைவு செய்கின்றது. எனினும் சிறுவர் உரிமை தொடர்பில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. தற்போது சிறுவர்கள் தொடர்பில் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியுள்ளது.
இதேபோல பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் இன்று அதிகரித்துச் செல்கின்றது. மேலும் ஒரு மனிதனுக்கு இருக்கின்ற உரிமைகளில் நடமாடும் சுதந்திரமும் ஒன்று. ஆனாலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு இவ்வாறான சுதந்திரங்களில்லை.
தற்போது வீடுகளிலும், வீதிகளிலும் சமூகத்திலும் என சிவில் தொடர்பிலான உரிமை மீறல்களே அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன. அத்துடன் தனி மனிதனை தனியார் துறையினரும் இன்று ஏமாற்றி வருகின்றனர் என்பது மனித உரிமை ஆணைக்குழுவிற்கு வரும் முறைப்பாடுகள் மூலம் அறியமுடிகின்றது. எனினும் அனைத்து குற்றங்களையும் விசாரிக்கும் அதிகாரம் எமக்கில்லை. எங்களுக்கும் மட்டுப்பாடுகள் உள்ளன. அதற்கமைய எங்களால் ஆட்சித்துறை, நிர்வாகம் தொடர்பில் மீறப்படும் குற்றங்களையே எங்களால் விசாரணை செய்ய முடியும். எனவே எமது கௌரவத்தினை நாம் மதிப்பதுபோல ஏனையவர்களுடைய கௌரவத்தையும் மதித்தால் மனித உரிமைகள் என்றும் நிலைநிறுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.