கீரிமலையில் கடற்படைக்கு காணி அளவிடும் பணிகள் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தம்!

0
117

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளினால் இன்று காலை முறியடிக்கப்பட்டது.

காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் கீரிமலை நகுலேஸ்வரம், ஜே/226 கிராம சேவகர் பிரிவில் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் ஒன்று நில அளவை திணைக்களத்தினால் திட்டமிடப்பட்டிருந்தது.

இதையடுத்து காணி உரிமையாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளான எம்.கே.சிவாஜிலிங்கம், ச.சஜீவன். வ.பார்த்தீபன் உள்ளிட்டவர்கள் அங்கு சென்று, இராணுவ முகாமிற்குள் நிலஅளவைத் திணைக்களத்தினர் நுழையவிடாமல் தடுத்தனர்.

பிரதேச செயலாளரை அங்கு வருமாறு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்தனர். எனினும், அவர் வரவில்லை.

பிரதேச செயலாளர், இராணுவம் கலந்துரையாடி, நிலஅளவைத் திணைக்களத்தினரை வேறு பாதையினால் அழைத்து செல்ல ஏற்பாடு நடைபெறுகிறது என போராட்டக்காரர்கள் மத்தியில் தகவல் பரவியதையடுத்து, நிலஅளவை திணைக்களத்தின் வாகனத்தை முன் பக்கமாகவோ, பின் பக்கமாகவோ செலுத்த முடியாதவாறு போராட்டக்காரர்கள் தடையேற்படுத்தினர்.

இதையடுத்து, தமது காணிகளை ஒப்படைக்க சம்மதம் இல்லையென காணி உரிமையாளர்கள் கையொப்பமிட்ட கடிதங்களை பெற்றுக் கொண்டு காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு செல்வதாக கூறிவிட்டு நில அளவைத் திணைக்களம் அவ்விடத்தில் இருந்து சென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here