இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம், நாகை மாவட்ட மீனவர்கள் 40 பேரையும் விடுவிக்க இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு கடல் கடந்து, அண்டை நாடுகளில் தனியார் நிறுவனம் மூலம் அனுமதியுடன் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 64 கிராமப் பகுதியைச் சார்ந்த சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வெளிநாடுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.
கடந்த 6 ஆம் திகதி கத்தார் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில், மீனவரொருவர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது.
அதேபோல், இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை அச்சுறுத்தி, கைது செய்வதும், படகுகளை சேதப்படுத்துவதும், பறிமுதல் செய்வதும், வலைகளை அறுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இதுவரை இலங்கை சிறையில் வாடும் இராமேஸ்வரம், நாகை மாவட்ட மீனவர்கள் 40 பேர் இன்னும் விடுவிக்கப்படாமல், அவர்களது படகுகளையும் ஒப்படைக்காமல் இலங்கை அரசு பிடிவாதப்போக்கை காட்டுகிறது. எனவே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு இலங்கை சிறையில் வாடும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மத்திய பா.ஜ.க. அரசு மீனவர்கள் பிரச்சனையில் மெத்தனப் போக்கை காட்டாமல் விரைந்து செயற்பட்டு நிரந்தர தீர்வு கண்டு அவர்களுக்கு ஓர் நம்பகத்தன்மையை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.”
Close