மட்டக்களப்பு கிண்ணையடி துறைக்கு மக்களின் போக்குவரத்தினை கருத்தில் கொண்டு படகு சேவையினை முன்னெடுப்பதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஒரு தொகுதி படகுகள் வழங்கப்பட்டன.
வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மூன்று இலட்சம் ரூபா இப்படகு சேவைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இச் சேவைக்கான வெள்ளோட்டம் செவ்வாய்க்கிழமை (26) மாலை கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அதிதிகளாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மாவட்ட இணைப்பாளர் த.சுரேஸ் மற்றும் ஆலய நிர்வாகிகள், விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கிண்ணையடி துறைக்கூடாக பிரம்படித்தீவு, பூலாக்காடு, முருக்கன்தீவு, பொண்டுகள்சேனை, கல்லடிவெட்டை, முறுத்தானை என பல்வேறு கிராமங்களில் வாழும் மக்கள் தமது போக்குவரத்தினை இலகுவாக மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் வழமையான சேவையில் ஈடுபட்டிருந்த படகுகள் சேதமடைந்ததன் காரணமாக கிண்ணையடி ஆற்றை கடந்து செல்வதில் மக்கள் தமது போக்குவரத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இந் நிலைமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனிடம் பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரம் விடுத்த வேண்டுகோளினையடுத்து இந்த மனிதநேய உதவி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விவசாய அறுவடை உள்ளீடுகள், கால்நடை உற்பத்தி பொருட்கள் என பல்வேறு விடயங்களுக்கு வசதியாகவுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.