ரியூனியன் தீவிலிருந்து மேலும் சில விமான சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய சிதைவுள் தொடர்பில் பிரான்ஸிடம் இருந்து எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் வெளியாவகில்லை.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பாகங்களில் விமானத்தின் ஆசனம் மற்றும் ஓரத்திலுள்ள யன்னல் பகுதி என்பன உள்ளடங்குகின்றன.
இந்த சிதிலங்கள் பிரான்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த விடயம் தொடர்பில் பிரான்ஸ் எதுவித உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை.
ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகள் MH370 விமானத்தினுடையது என மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் உறுதிப்படுத்தியிருந்தார்.
கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகம் தொடர்பில் பிரான்ஸில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், ரியூனியன் தீவிற்கு விசாரணை அதிகாரிகளை மலேசியா அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி 14 நாடுகளை சேர்ந்த 239 பேருடன் கோலாலம்பூிரிலிருந்து பெய்ஜிங் நோக்கி பயணித்த MH370 விமானம் எவ்வித தடயங்களும் இன்றி காணாமல் போயிருந்தது.
சுமார் ஒரு வருடத்திற்கும் அதிகமாக மர்மமாக இருந்த இந்த விடயம் கடந்த மாதம் 29 ஆம் திகதி விமானத்தின் பாகங்கள் ரியூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஓரளவு தெளிவடைந்தது.
இதேவேளை ஆய்வுகளின் அடிப்படையில், ரீயுனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் MH370 உடையது என மலேசிய பிரதமர் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தினார்.
கடந்த ஒரு வருடமாக வரலாற்றில் மிகப்பெரும் மர்மமாக காணப்பட்ட மலேசிய விமானம் தொடர்பான கேள்விகளின் புதிர் இத்துடன் முடிவுக்கு வரலாம் என நம்பப்படுகின்றது