க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டை கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டமை தொடர்பில் பாடசாலை அதிபர் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்த முழுமையான விசாரணைக ளை முன்னெடுப்பதற்காக குறிப்பிட்ட பாடசாலையின் அதிபரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கல்வி அமைச்சு நேற்று பணிப்புரை வழங்கியுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க இதற்கான பணிப்புரையை வழங்கியுள்ளார்.
பரீட்சைத் திணைக்களம் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் திகதி சகல பாடசாலைகளுக்கும் பரீட்சைக்கான அனுமதியட்டைகள் அனுப்பிவைக் கப்பட்டிருந்தன. பாடசாலைகளுக்கு இவை கிடைத்தவுடனேயே பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிடம் கையளிக்குமாறும் பரீட்சைத் திணைக்களம் பாடசாலை அதிபர்களுக்கு கடிதம் மூலம் பணிப்புரை வழங்கியிருந்தது.
தம்மிடம் வைத்திருக்காமல் உடனடியாக பரீட்சார்த்திகளிடம் ஒப்படைக்குமாறு சகல ஊடகங்கள் மூலமும் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டி ருந்தது. இவ்வாறான நிலையில் 2015 ஓகஸ்ட் 6ஆம் திகதி வரையிலும் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை தம்வசம் வைத்திருந்ததாக முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. எனவே இது தொடர்பாக முழுமையான விசாரணைகள் முடிவடையும் வரை வவுனியா பண்டாரிக் குளம் விபுலானந்த வித்தியாலயத்தின் அதிபர் சேவையிலிருந்து இடைநிறுத்தப் பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதி அட்டை கிடைக்கவில்லையென்ற காரணத்தினால் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த மகாவித்தியாலய மாணவி தற்கொலை செய்துகொண்டார். கடந்த 6ஆம் திகதி வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் பாய்ந்து குறித்த மாணவி தற்கொலை செய்திருந்தார்.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த மகாவித்தியாலயத்தில் 13ஆம் தரத்தின் கலைப்பிரிவில் கல்வி பயின்றுவந்த 18 வயதான குணசேகரம் திவ்யா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வவுனியா வேப்பம்குளத்தில் வதியும் இந்த மாணவி முதற்தடவையாக இந்தப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தார்.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையாத காரணத்தினால் இவருக்கு உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டை பாடசாலையால் பெற்றுக்கொடுக்கப்பட வில்லை எனத் தெரியவருகிறது. இந்த மாணவி கடந்த 6ஆம் திகதி காலையிலிருந்து காணாமல் போயிருந்தார். இவரைத் தேடியபோது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் பிணமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மரணவிசாரணை அதிகாரி ரி.பார்த்தீபன் நேற்று மரண விசாரணைகளை மேற்கொண்டார். நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் தெரிவிக்கும்போது, பரீட்சைக்கான அனுமதியட்டை கிடைக்காத காரணத்தினால் மிகவும் மனவருத்தத்துடன் இருந்ததாகவும், எனினும் இவ்வாறு தற்கொலை செய்துகொள்ளுவார் என தாம் எண்ணியிருக்கவில்லையென்றும் தெரிவித்தனர்.