கலைஞனாகவும் நல்ல பண்பாளனாகவும் தன்னை அடையாளப்படுத்திய தமிழீழத்தின் புகழ்éத்த தபேலா வாத்தியக் கலைஞரான சதாசிவம் வேல்மாறன் அவர்கள் 18.09.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழ்மக்களையும் கலைஞர்களையும்; துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
“திலீபன் அழைப்பது சாவையா” ஓ.. மரணித்த வீரனே” ‘மாவீரர் யாரோ என்றால்” ‘மாவீரர் புகழ் பாடுவோம்” உள்ளிட்ட பல தமிழீழ எழுச்சிப் பாடல்களுக்குத் தபேலா வாத்திய அணிசெய் கலைஞனாகத் தடம்பதித்து, 1990 ஆம் ஆண்டிலிருந்து கலைபண்பாட்டுக்கழகத்தில் தன்னை ஒருவராக இணைத்து, தெருவெளி நாடகங்களிலும் கலைநிகழ்வுகளிலும் இசைவாத்தியக் கலைஞராகத் தன் கலைப்பணியை ஆரம்பித்தவராவார்.
ஆர்மோனியம், கடம், கெஞ்சிரா, தபேலா, மிருதங்கம் போன்ற வாத்தியங்களை இசைக்கக்கூடிய இவர், ஈழத்தின் மிகச் சிறந்த வில்லிசை, நாடகக் குழுவினருக்கும் இசைவாத்தியக் கலைஞராகப் பணியாற்றியதோடு, தமிழீழ இசைக்குழுவில் தபேலா வாத்தியக் கலைஞராக இணைத்துக்கொண்ட காலத்தில் இருந்து விடுதலைப்பாடல்களுக்கு தன் கலைத்திறனால் மெருகூட்டி உணர்வூட்டியவராவார். 2003 ஆம் ஆண்டு தமிழீழ இசைக்குழு ஐரோப்பியப் பயணம் மேற்கொண்டபோது அக்குழுவில் இவரும் ஒருவராக இடம்பெற்றிருந்தார்.
ஆயிரத்திற்;கும் மேற்பட்ட அரங்க நிகழ்வுகளை அணிசெய்த சதா வேல்மாறன், வளர்ந்துவரும் இளங்கலைஞர்களைத் தட்டிக்கொடுத்து வளர்க்கும் பண்புடையவர். இவரது இசை ஆளுமையும் நற்பண்புகளும் வழிகாட்டல்களும் பல நூறு கலைஞர்களைத் தமிழீழத் தேசத்திற்குத் தந்துள்ளது. இவரது இசைப்பணிக்காகப் பல தடவைகள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களிடம் பாராட்டினைப் பெற்றவராவார்.
தமிழீழ விடுதலை எழுச்சிப் பாடல்களுக்குத் தபேலா வாத்திய இசையூடாக உணர்வேற்றிய கலைஞரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மாணவர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குத் தனது இசைப்பயணத்தினூடாக வலுச்சேர்த்த சதாசிவம் வேல்மாறன் அவர்களின் தேசியப்பணிக்காக“நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம். இவருடைய கலைத்திறனால் இனிமைபெற்ற பாடல்கள் காலப்பெருவெளியில் கரையாது நிலைபெறும்.
‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்>
தமிழீழ விடுதலைப் புலிகள்.