இன்றைய இலங்கை அரசியல் சூழ்நிலையில் பெரும்பான்மைக் கட்சிகள் சமபலத்தோடு போட்டியிடும் நிலையில், சிறுபான்மை மக்களாகிய நாம் நமது வாக்குகளைப் பயன்படுத்தி தமிழ்த் தேசிய நலன்களை முன்னிறுத்தக் கூடிய பிரதிநிதிகளைத் தெரிவுசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை.
இதுகுறித்து ஆயர் சார்பாக மன்னார் மாவட்ட குருமுதல்வர் அருட்திரு. ஏ. விக்ரர் சோசை இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழர்களின் உரிமைப் போராட்டம் என்பது அஹிம்சைப் போராட்டமாக ஆரம்பித்து பின்னர் அது ஆயுதப் போராட்டமாக மாறி ஈற்றில் 2009இல் அந்த ஆயுதப் போராட்டமும் பல்வேறு சூழ்நிலைகளால் முடிவுக்கு வந்தது.
போர் முடிவடைந்தாலும் தமிழரின் உரிமைப்போராட்டம் முடிவடையவில்லை என்ற வகையில் தற்போது தமிழர்களாகிய நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நமது ஜனநாயக பலம்தான்.
நமக்கு இருக்கக்கூடிய ஜனநாயக உரிமைகளை உரிய விதத்தில் பயன்படுத்தி, நமது உரிமைகளை வென்றெடுக்கும் வழிவகைகள் பற்றி நாம் அதிக சிரத்தையோடு சிந்திக்கவும் செயலாற்றவும் அழைக்கப்படுகின்றோம்.
குறிப்பாக நமது கையில் இருக்கும் வாக்குச்சீட்டை சரியான வழியில் பயன்படுத்துவதன் மூலம் நமது உரிமைகளை நாம் உத்தரவாதப்படுத்த முடியும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை இன மக்களாகிய நாம் நமது வாக்குப் பலத்தை இந்தத் தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் நிரூபித்திருக்கின்றோம்.
இப்பொழுது மீண்டும் நமக்கொரு சந்தர்ப்பம் வந்துள்ளது. நமது வாக்களிக்கும் உரிமையை நிதானமாகச் சிந்தித்து செயற்படுத்துவதன் மூலம் நமது அரசியல் உரிமைகள் மற்றும் வாழ்வாதார, அடிப்படை உரிமைகளை நாம் வென்றெடுக்கமுடியும்.
குறிப்பாக இன்றைய இலங்கை அரசியல் சூழ்நிலையில் பெரும்பான்மைக் கட்சிகள் சமபலத்தோடு போட்டியிடும் நிலையில், சிறுபான்மை மக்களாகிய நாம் நமது வாக்குகளைப் பயன்படுத்தி தமிழ்த் தேசிய நலன்களை முன்னிறுத்தக் கூடிய பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதன் மூலம், நாம் இலங்கை அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கமுடியும்.
எனவே நமது அரிய பெரிய ஜனநாயக ஆயுதமாகிய நமது வாக்குரிமையை நாம் உரியமுறையில் பயன்படுத்தி, தவறாது வாக்களிப்பதன்மூலம் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள உங்களைக் கேட்டுநிற்கின்றேன். – என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.