பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் கடந்த 12 ஆண்டுகளாக நடாத்தி வரும் தாயக விடுதலைப்பாடற்போட்டியான சங்கொலி 2021 விருதிற்கான போட்டி எதிர்வரும் 10 ம் நாள் புளோமினல் மாநகரத்தில் காலை 9.30 நடைபெறவுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலகத்தை உலுக்கி விட்டு கோடிக்கணக்கானோரில் தொற்றி நிலைகுலையச் செய்ததோடு உலகம் முழுவதும் 42 லட்சத்திற்கு மேலான மக்களை பலியெடுத்து பேரிடரை ஏற்படுத்திய கொரோனா என்னும் கொடிய வைரசு நோயானது மனிதகுலத்திற்கு பெரும் பாடங்களைத் தந்து கொண்டிருக்கும் இவ்வேளை சர்வதேசமெங்கும் ஒவ்வொரு அரசுகளும் தனது மக்களை காப்பாற்றும் வகையில் செய்து கொண்ட சுகாதார வழிமுறைகளால் படிப்படியாக குறைந்து வரும் வேளையில் இதன்தாக்குதலில் தாயகத்திலும், புலம்பெயர்ந்த மண்ணிலும் எம்மவர்கள் பலரை நாம் இழந்திருந்தோம். ஆனாலும் அதிலிருந்து மீண்டு எமது மக்கள் வழமையான வாழ்க்கைக்குள் திரும்பி வருகின்ற அதேவேளை இழப்புக்களால் அவர்கள் மனங்கள் துன்பப்பட்டு இருந்தபோதும் எமது மக்கள், இளையவர்கள், பழைய நிலைக்கு வந்து நம்பிக்கையான தமது வாழ்வை தொடரவேண்டும் என்பதோடு அனைவரும் தாயகத்தோடும் மொழி, பண்பாடு, கலை, விளையாட்டு, மனிதநேயம் என்ற பாதையில் எவ்வாறு வளர்ந்து வந்தார்களோ அவ்வாறே தொடரவும், தடங்கல்களாகிப்போன எம் தேசம் நோக்கிய அனைத்துச் செயற்பாடுகளும் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்க தொடங்கியுள்ளன.
அந்த வகையில் தாயக விடுதலைப் படல்களுக்கான சங்கொலி விருதுக்கான பாடற்போட்டி பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் எதிர்வரும் 10. 10. 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடாத்துகின்றது. பாலர்கள் உட்பட பெரியவர்கள் வரையான போட்டியாளர்கள் இதில் பங்கு பற்றுகின்றார்கள். இவர்கள் அனைவரும் அதிகம் பேர் இளையவர்களாகவும் இருப்பதுடன் புதிய வீரியத்துடன் தமது பாடல்களை கொடுக்கவுள்ளனர்.
கோவிட்19 சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. கலைப்பிரியர்கள், இசைஆர்வலர்கள், விடுதலைப்பற்றாளர்கள் கலந்து கொள்வதோடு பிரான்சு மண்ணிலே தேசவிடுதலைக்கு கலைரீதியாக பங்களித்தவர்கள் ஆண்டு தோறும் “ விடுதலையின் வேர்கள்’’ என்கின்ற மதிப்பளித்தலையும் பெற்றுக்கொள்கின்றனர் இந்நிகழ்வில் இதுவும் இடம் பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
நன்றி பரப்புரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு
