தமிழ் அரசியல்வாதிகளை விட தமிழ் மக்கள் மகா புத்திசாலிகள்!

0
292

OLYMPUS DIGITAL CAMERAதமிழ் அரசியல்வாதிகள் பல சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களுக்கு புத்திமதி கூறுவதுபோல உரையாற்றுவதைப் பார்க்கும் போதெல்லாம் கடுமையாக  வேதனைப்படுவதுண்டு.

இத்தகைய தன்மை எதற்கானது என்று சிந்திப்பதும் தங்களுக்குச் சொல்ல வேண்டியதை மக்களுக்குச் சொல்கிறார்களே என்று நினைப்பதும் உண்டு.

இதை நினைக்கும் போதெல்லாம் அல்லைப்பிட்டியூர் பண்டிதர் செ.திருநாவுக்கரசு அவர்கள் கூறிய ஒரு கதைதான் ஞாபகத்திற்கு வரும்.

ஒருவர் டாக்டரிடம் சென்று ஐயா! என் மனைவிக்கு சரியாகக் காது கேட்பதில்லை. கேட்டலைச் சரிப்படுத்த மருந்து தாருங்கள் என்றார்.

அதற்கு உங்கள் மனைவிக்கு எவ்வளவு தூரத்தில் நின்று கதைக்கும் போது கேட்காமல் இருக்கிறது என்பதை அளவிட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பினார் டாக்டர்.

வீட்டிற்கு வந்த அந்த ஆள், 40 அடி தூரத்தில் நின்று கொண்டு தன் மனைவியைப் பார்த்து இரவுக்கு என்ன? சாப்பாடு என்று கேட்டார்.

அவரின் கேள்விக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. 30 அடி தூரத்தில் நின்று மீண்டும் இரவுக்கு என்ன சாப்பாடு என்றார்.

எந்த விடையுமில்லை. மீளவும்  20 அடி தூரத்தில் நின்று கொண்டு, மனைவியைப் பார்த்து இரவுக்கு என்ன சாப்பாடு என்றார்.

ஊ…ஹூம் எந்தப்பதிலுமில்லை. கடும் கோபத்துக்கு ஆளான கணவன் தூர இடைவெளியைக் குறைத்து 10 அடி  தூரத்தில் நின்று கொண்டு, இரவுக்கு என்ன சாப் பாடப்பா என்றார்.

அதற்கு மனைவி, இரவுக்கு இடியப்பம் என்று இதோடு நான்கு தடவை சொல்லிப் போட்டன் என்றார். அப்போதுதான் தெரிந்தது மனைவிக்கு அல்ல; கணவனுக்குத்தான் காது கேளாதென்பது.

இந்த நிலைமையில்தான் தமிழ் அரசியல்வாதிகள் இருக்கின்றனர். உண்மையில் தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருப்பதுடன் அறிவு பூர்வமாகவும் சிந்திக்கின்றனர்.

அந்தச் சிந்தனையின் வெளிப்பாடே வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த வாக்குகளாகும்.

தமிழ் மக்கள் தங்கள் மண்ணை எத்துணை தூரம் நேசிக்கின்றனர் என்பதற்கு அந்த வாக்குகள் தக்கசான்று.

அந்த வாக்குகளைப் பெற்ற மாகாண சபை  உறுப்பினர்கள் தங்கள் சேவையை எங்ஙனம் ஆற்றுகின்றனர் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

இதேபோல் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடகம் நடிக்கின்றனர். யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ வருகை தந்த போது, அவர் கலந்து கொள்ளும்  நிகழ்வைப்  புறக்கணிப்பது என்று முடிவு செய்து அதை செயற்படுத்தியும் காட்டினர்.

அதே சமயம் தென்பகுதியில் ஜனாதிபதியைக் கண்டதும் ஆரத்தழுவி அன்பு காட்டுகிறீர்கள்.

ஏன் இந்த நடிப்பும் நாடகமும்? முதலில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதிகளும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் தமிழ் மக்களுக்கு விசுவாசமாக நடக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.

மேடை ஏறி தமிழ் மக்களுக்கு புத்திமதி கூறுவதை விடுத்து முதலில் நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக கபடத்தனத்துடன் செயற்படுகிறீர்கள் என்ற உண்மையை தமிழ் மக்கள் மிகத் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர் என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் பற்றிய தமிழ் மக்களின் எண்ணப் பதிவுகளை சரிப்படுத்த உங்களுக்கு நீங்கள் புத்திமதி கூறிக் கொள்வதுதான் இப்போதைக்குப் பொருத்தம்.

– வலம்புரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here