யாழ் .குருநகர் பகுதியில் இருந்து நேற்றையதினம் இரவு 12 மணியளவில் மீன்பிடி தொழிலுக்காக சென்ற நிலையில், இந்திய மீனவர் படகால் மோதி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம், இன்று அதிகாலை 3 மணியளவில் இலங்கை கக்கடதீவு கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கக்கடதீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர் படகு இலங்கை மீன்பிடி படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்திய தோடு படகில் இருந்தவர்களை தாக்கி படகில் இருந்த மூவரையும் கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டதாக குருநகர் மீனவர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய மீனவர்களி ன் குறித்த அத்துமீறல் சம்பவம் தொடர்பில் குருநகர் மீனவ சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினை நிறுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் யூலியன் சகாயராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய இழுவை படகுகளின் பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே கடற்றொழில் அமைச்சு மட்டத்தில் முறையிட்டுள்ளோம். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகை நிறுத்தப்பட வேண்டும். இந்த பிரச்சனையானது தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.
(நன்றி: வீரகேசரி)