தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வாய்ப்பு உள்ளது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் 2008ஆம் ஆண்டு ‘ஈழத்தில் நடந்தது என்ன?’ என்ற தலைப்பில் மதிமுக சார்பில் நடந்த கருத்தரங்கத்தில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக, வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இவ்வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக வைகோ நேற்று நீதிமன்றத்துக்கு வந்தார். இவ்வழக்கின் புகார்தாரரான கியூ பிராஞ்ச் முன்னாள் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனை வைகோ தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் குறுக்கு விசாரணை செய்தார்.
பின்னர், வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி கயல்விழி உத்தரவிட்டார்.நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கூறியதாவது:திருப்பதி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சவைக் கண்டித்து கறுப்புக் கொடி காட்டுவதற்காக எந்தவொரு அரசியல் கட்சியும் திருப்பதிமலைக்கு செல்லவில்லை. ஆனால், மதிமுகவினர் உயிரைப் பணயம் வைத்து திருப்பதி மலைக்கே சென்று ராஜபக்சவுக்கு கறுப்புக் கொடி காட்டினார்கள்.
அதனால் அவர்களை காவல்துறையினர் தாக்கினர்.அதுகுறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர். அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ராஜபக்ச இந்தியா வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம். அதனால் மோடி எப்போது தமிழ்நாட்டுக்கு வந்தாலும் கறுப்புக் கொடி காட்டுவோம்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதை கண்டித்தும், தஞ்சையில் மீத்தேன் எரிவாயு திட்டம் கொண்டு வருவதை எதிர்த்தும் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இப்போராட்டம் 22ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு அனைத்து கட்சியினரின் ஆதரவு கோரப்படும். வரும் 23ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவந்தால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது. இதை நான் அரசியலுக்காக சொல்லவில்லை என்று வைகோ கூறினார்.