தமிழீழத் தேசியப் பாடகர் “ஈழமண் தந்த குயில்” வர்ண இராமேஸ்வரன் அவர்கள் இன்று 25.09.2021 சனிக்கிழமை கனடாவில் சாவடைந்துள்ளார். கொரோனா தொற்றினால் ரொறோன்ரோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இராமேஸ்வரன். தந்தையார் கலாபூசணம் சங்கீதரத்தினம் முருகேசு வர்ணகுலசிங்கம் ஒரு சிறந்த இசைப் பாரம்பரியத்திலே தோன்றியவர். இவரது தந்தை வழிப்பேரனார், தாய் வழிப்பேரனாரும் இசை நாடகக் கலைஞர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும் பின்னர் உயர் கல்வியை பண்ணிசை மூலமும், பின்னர் மிருதங்கம் வாசிப்பது மற்றும் ஆர்மோனியம் வாசிப்பதன் மூலமும் தந்தையின் பயிற்சியில் கர்நாடக இசையைக் கற்றார்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பிரிவில் மாணவனாக இணைந்து கொண்டார். அதன் வாயிலாக நான்கு ஆண்டுகள் இசைக்கலைமணி என்னும் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்று, அங்கேயே தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இசை விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
பின்னர் தமிழீழப் பாடல்கள் பலவற்றை நேர்த்தியாக எமக்குத் தந்தவர். துயிலும் இல்லப்பாடலான தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!… மற்றும் தாயக மண்ணின்காற்றே என்னில் வீசம்மா…,, முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடல் (விளக்கேற்றி அஞ்சலி செய்யும்போது ஒலிக்கும் பாடல்), ” எப்படித் தாங்குவதோ இறைவா “இந்த பாடலுக்கான தனிசிறப்பு (2009ம் ஆண்டு யூன் 24ம் திகதி எழுதிய வலியின் வரிகள் தான் இந்தப்பாடல்,) அப்புகாமி பெற்றெடுத்த… போன்ற எண்ணற்ற பாடல்களை எமக்குத் தந்துள்ளார்.
அன்னாரின் இழப்பு தமிழ்த் தேசியத்துக்குப் பேரிழப்பாகும். மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
(எரிமலையின் செய்திப்பிரிவு)