மன்னார் பேசாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வங்காளை பாடு கடற்பகுதியில் மீனவர்கள்,பெண்கள் கிராம சேவையாளர் உட்பட பலரை காரணம் இன்றி கடுமையான ஆயுதங்களால் சிறீலங்கா கடற்படையினர் தாக்கியுள்ளனர்.
இதன் காரணமாக பலத்த காயங்களுடன் கிராம அலுவலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்:-நேற்றைய தினம் இரவு கடற்தொழிலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர்கள் இருவரை சிவில் உடையில் வந்த இரு கடற்படையினர் தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் மீன்பிடிக்க சென்ற தனது தந்தை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் கடற்கரைக்கு சென்ற கிராம சேவையாளர்,அப்பகுதியில் மீனவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்து கேள்வி கேட்டதை தொடர்ந்து முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்து கோவமுற்ற இரு கடற்படையினரும் அருகில் இருந்த கடற்படை முகாமுக்கு சென்று சிறிது நேரத்தில் 10 க்கு மேற்பட்ட கடற்படையினருடன் மீண்டும் அப்பகுதிக்கு வருகை தந்து அப்பகுதியில் நின்ற மீனவர்கள் பெண்கள் கிராமசேவகர் உட்பட அனைவரையும் தாக்கியதுடன் துப்பாக்கியை தலையில் வைத்து அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடுமையாக தாக்கப்பட்ட கிராம சேவகர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.